எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ?


ANTHAPPAARVAI

அம்மா...!
அம்மா... அ...!
அம்மா... ஆ...!
எனது குரல் உனக்குக் கேட்கிறதா அம்மா?

உன்னை இப்படி அழைத்துப் பார்க்க வேண்டும் என்பது
எனது நீண்ட கால ஆசை அம்மா!
அதனால் தான் அழைத்துப் பார்த்தேன்!
அதற்காக நீ என் வீட்டிற்கு வந்து விடலாம்
என்று நினைத்து விடாதே!

நான் உனது வயிற்றில் பிறந்த முதல் குழந்தை என்றாலும்...
எனது இயலாமையை நினைத்து
நான் உனக்காக வருந்துகிறேன் அம்மா...!
என் உடன் பிறந்த தம்பிகள்
இன்று உன்னை அனாதையாக்கி விட்டார்களா அம்மா?

இருந்தாலும் அதில் ஏதாவது ஒரு காரணம் இருந்திருக்கும்...!
ஆனால், நீ என்னை ஒதுக்கியதில் என்ன காரணம் அம்மா இருந்தது?..
இந்த 30 வருட சுழற்சியில்... காலம் உன்னை எப்படி
திருப்பி அடிக்கிறது என்று பார்த்தாயா அம்மா?...

சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி
நான் உன்னைப் பழி தீர்ப்பதற்காக
இதை சொல்லவில்லை அம்மா...
என்னால் உன்னைக் காப்பாற்ற முடிய வில்லையே...
அதற்கு நீயே காரணமாகவும் இருந்திருக்கிறாயே...
என்ற ஆதங்கத்தில் தான்
அதை உனக்கு நினைவு படுத்துகிறேன்...!

ஆமாம் அம்மா! அவ்வளவு பெரிய நமது வீட்டில்
எனக்கு வாழ இடம் இல்லை என்று தானே
நீ என்னை ஒதுக்கி விட்டாய்... அதனால் தான்
நானும் உனக்கு அடைக்கலம் கொடுக்க முடியாமல் தவிக்கிறேன்...

அன்று நீ எப்படி சூழ்நிலைக் கைதியாக இருந்தாயோ...
அதைப் போலவே இன்று நானும் உன்னால் சிறை படுத்தப் பட்டிருக்கிறேன்...
இதைத் தவிர என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை அம்மா!

அம்மா...!
அம்மா...அ...!
அம்மா... ஆ...!
நான் பேசுவது உனக்கு புரிகிறதா அம்மா?!

இந்த வெயில் பொழுதில் நீ இப்படி அலைந்து திரிவதை
என்னால் தாங்க முடியவில்லை அம்மா!
ஆனாலும், எனது வீட்டிற்கு வந்து என்னோடு தங்கிவிடு
என்று சொல்லவும் நான் விரும்பவில்லை!

அதனால்...
என் வீட்டு வாசல் அருகில் நான் ஒரு மரம் வளர்த்து வருகிறேன் அம்மா...
வேண்டுமானால் அங்கே கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து விட்டு
வெய்யில் குறைந்தவுடன் வேறு எங்காவது போய் விடு அம்மா!
நீ என்னைப் பெற்ற கடனுக்காக
என்னால் இதை மட்டும் தான் செய்ய முடியும்!

பல காலங்களாக கிடைக்காத உனது அரவணைப்பு
இப்போதாவது எனக்கு கிடைக்காதா என்று தான் தோன்றுகிறது...
அப்படி உனது அரவணைப்பு எனக்குக் கிடைக்க வேண்டும் என்றால்
நீ என்னுடன் அல்லவா தங்க வேண்டியிருக்கும்?!...
அதனால் என் வீட்டிலும் உனக்கு இடம் இல்லை அம்மா!
நீ வேறு எங்காவது போய்விடு!

அம்மா...!
அம்மா...அ...!
அம்மா...ஆ...!
நான் இப்போதும் உனக்காக அழுகிறேன்
என்பது உனக்குப் புரிந்ததா அம்மா...?!
ம்கும்... பிறந்த போது நான் கதரியதே உனக்குக் கேட்கவில்லை...
இன்று மட்டும் எப்படி கேட்டுவிடப் போகிறது?

நீ மட்டும் அன்று என்னை உதாசீனப் படுத்தாமல் இருந்திருந்தால்
இன்று நான் உன்னை மகாராணி போல் பாதுகாத்திருப்பேனே அம்மா!...
ஏன் அம்மா அழுகிறாய்?

என் வீட்டு வாசல் வரை வரச்சொன்ன நான்
ஏன் உன்னை எனது வீட்டிற்குள் அழைக்க வில்லை
என்று வருந்துகிறாயா...?

எப்படி அம்மா நான் உன்னை அழைப்பேன்...?
பிறந்த நாளில் இருந்து-நான்
கல்லறையில் அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறேன்!!!
பெண்ணாகப் பிறந்து விட்ட காரணத்திற்காக
நீ தானே என்னை அங்கே அனுப்பி வைத்தாய்!

உன்னை அழைப்பதில் எனக்கு விருப்பம் இல்லை தான்
இருந்தாலும் கேட்கிறேன்...
என்னோடு வந்து விடுகிறாயா அம்மா?

அம்மா...!
அம்மா...அ...!
அம்மா... ஆ...!
நான் பேசுவது உனக்கு கேட்கிறதா அம்மா?


(2010 அன்னையர் தினத்திற்கான பாராட்டுக் கவிதை)

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!