“ஹர்ஜன்” (குறும்படம், சிறுகதையாக…)


avatar

ஜாதி வேறுபாடுகள் இல்லாமல் போக என்ன செய்ய வேண்டும்?

” இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று “


இந்தக் குறளை, ஒரு முறைக்கு பலமுறை படித்துப் பார்த்துவிட்டு கீழே படியுங்கள். சின்னப் பசங்களை வைத்து மிகப் பெரிய விஷயம்!!

ஒவ்வொரு பிஞ்சு நெஞ்சிலும், பிறந்த பதிமூன்று வருடங்களுக்குப் பிறகு கண்டிப்பாக ஜாதி (வெறி)வேறுபாடு (நினை)வூட்டப்படுகிறது!!
இது கட்டாயமாக்கவும் பட்டுள்ளது.

பதிமூன்று வயது என்பதை TEEN AGE என்று கூறுவார்கள். “TEEN” என்பதற்கு “கேடு” என்றும் ஒரு பொருள் உண்டு. அந்த வயதில் அறிந்து கொள்ளும் “பல” விஷயங்கள் வெறியைத்தான் தூண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. எனவே தெரிந்து தான் புகுட்டுகிறார்களோ?

அரசு வேலைக்கு செல்லவேண்டும் என்று ஆசைப்படுவோர்கள், குறைந்தபட்சம் 8-ம் வகுப்புப் படித்திருக்க வேண்டுமாம்! ஏன் இந்த 8-ம் வகுப்பு? அப்படி என்ன தான் இருக்கிறது இந்த 8 ம் வகுப்பில்? எல்லாமே அந்த 8-ம் வகுப்பில் தான் இருக்கிறது!!

இதோ….

“ஹர்ஜன்” (குறும்படம், சிறுகதையாக…)

“ஹர்ஜன்” (குறும்படம், சிறுகதையாக…) Harjan_classroom
ஞ்சக்காடு கிராமம்!

அமைதியான, ஒற்றுமையான, பண்பான மக்கள் வாழும் ஒரு சிறிய ஊர். ஜாதி என்ற புத்து நோய் அங்கேயும் இருந்தது 10 வருடங்களுக்கு முன்பு! ஆனால், பெற்ற பிள்ளைகளை படிக்க வைக்க கூட வசதியில்லாத நிலையில், இந்த ஜாதி இருந்து என்ன செய்யப் போகிறது? என்பதை உணர்ந்த மக்கள் “ரத்தக் களரிகளை” மறந்து பல வருடங்கள் ஆகின்றன. இன்று எல்லோரும் ஒரே உறவுகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

ள்ளி விடுமுறை காலம்! ஊருக்கருகில் 3 சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருக்கின்றனர். அப்போது சத்யா கேட்டாள், ” டேய், நம்ம ஹர்ஜன் எங்கடா… ஆளையே காணோம்?

சங்கர்: ” உனக்கு தெரியாதா? அவனுக்கு ஜுரம். அதனால தான் அவன் வரலை”

பிரவீன்: “என்னது ஹர்ஜனுக்கு ஜுரமா? டேய், அப்படினா வாங்கடா எல்லாரும் போய் பார்த்துட்டு வருவோம்” மூன்று பேரும் எழுந்து செல்கின்றனர்…..

இந்த ஹர்ஜன் தான் நம் கதையின் ஹீரோ! 8-ம் வகுப்பு படிக்கும் இந்த சிறுவன் தான் ஜாதியை (வேறுபாட்டை) ஒழிக்கப் போகிறான்!

சத்யா, சங்கர், பிரவீன், ஹர்ஜன் இந்த 4 பேரில் ஹர்ஜன் யார்? என்பது பெயரிலேயே புரிந்திருக்கும்! இந்த ஊரிலேயே பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் இவர்கள் மட்டும் தான். அதுவும் இலவச கல்வி என்றதனால் தான். பள்ளிக்கூடம் 10 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும் என்பதால், மற்றவர்களுக்கு தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப (பயணச்செலவு) வசதி இல்லை.!

னது நண்பர்களைப் பார்த்ததும் ஹர்ஜன் எழுந்திரிக்க முயன்றான்…

“ஆ..ம்… வேண்டாம்! வேண்டாம்! பரவாயில்லை ஹர்ஜன் நீ படுத்துக்கோ” என்று பெரிய மனிதர்களைப் போல் சொல்லி விட்டு, தாங்கள் வாங்கி வந்த பிஸ்கட் பாக்கெட்டை ஹர்ஜனிடம் கொடுத்தாள் சத்யா. சங்கரும், ப்ரவீனும் ஹர்ஜனுக்கு பிஸ்கெட்டை ஊட்டி விட்டனர். பின்பு ஆறுதல் சொல்லி விட்டு கிளம்பி சென்றனர்…

இங்கு நடந்ததை எல்லாம் புன்னகையோடு பார்த்துக்கொண்டு இருந்த ஹர்ஜனின் தாய், தன் மகன் மீது அவர்கள் வைத்திருக்கும் பாசத்தையும், நட்பையும் நினைத்து பெருமை பட்டுக் கொண்டாள். அப்போது, 10 வருடங்களுக்கு முன்பு நடந்த “ரத்தக்களறி” அவள் நினைவில் வந்து போனது!

நாட்கள் கடந்தன…

ருநாள், ஊருக்குள் அம்பேத்கார் பிறந்த நாளன்று, கொடியேற்றி அனைவருக்கும் மிட்டாய் கொடுத்தனர். அப்போது ஹர்ஜனிடம், அவனது நண்பர்கள் கேட்டனர் “அம்பேத்கார்-னா யாருடா?”

“உங்களுக்கு தெரியாதா? அங்க பாரு, பொட்டு வச்சி மாலை எல்லாம் போட்டு இருக்காங்கல்ல… அம்பேத்கார்-னா சாமிடா !”

“ஓ.. அப்படியா?.. சாமி!... எங்களுக்கு நல்ல படிப்பை குடு சாமி…” என்று அம்பேத்கார் போடோவைப் பார்த்து அனைவரும் கும்பிட்டனர்…..

நாட்கள் மாதங்களாக கடந்தது….

ஒரு நாள், பள்ளி வகுப்பாசிரியர் சுற்றறிக்கை வாசித்தார், “பசங்களா…. இலவச பாட புத்தகம் வந்திருக்கிறது, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதாவது SC , ST மாணவர்களுக்கு மட்டும் தான் அது கிடைக்கும். அதனால நான் இப்ப பெயர் படிக்கிறேன், அவங்க மட்டும் போயி புத்தகங்களை வாங்கிட்டு வாங்க. சரியா?” என்று பெயர்களை வாசிக்கத் தொடங்கினார்….

ர்ஜன் வாங்கி வந்த புத்தகத்தை, அவனது நண்பர்களான சத்யா, சங்கர், மற்றும் பிரவீன் ஆகிய மூவரும் ஆசையோடு வாங்கி பார்த்தனர்,

“நல்ல வாசமா இருக்குதில்லே….? ஏண்டா எங்களுக்கு எல்லாம் புத்தகம் தரல?…” என்று கேட்டனர்.

“தெரியலப்பா…, உங்களுக்கெல்லாம் அப்பறமா வரும் போல இருக்கு” என்று கூறிவிட்டு தனது புத்தகங்களை ஆசையோடு பார்த்துக் கொண்டிருந்தான் ஹர்ஜன்!

சிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார், ஆங்கில ஆசிரியரைப் பார்த்தாலே இந்த கூட்டத்திற்கு சிரிப்பு தான் வரும். காரணம், ஒரு நாள் பக்கத்து வகுப்பு மாணவியின் தந்தை கோபத்தோடு தலைமை ஆசிரியரிடம், ஆங்கில ஆசிரியரைப் பற்றிக் குறை கூறிக் கொண்டிருந்தார்….

”என்னாங்க, உங்க வாத்தியாரு…. என் பொண்ணு கிட்ட, உனக்கு “கிளாமரே” தெரியலைன்னு சொல்லியிருக்காரு, கொஞ்சம் என்னான்னு கேட்டு சொல்லுங்க! நாங்க படிக்க அனுப்புறோமா? இல்லை "கிளாமர் காட்ட" அனுப்புறோமா? இன்னைக்கு ரெண்டுல ஒன்னு தெரியனும்.”

“என்னையா இது? ஏன் அப்படி கேட்டே? என்று தலைமை ஆசிரியர் கேட்க,

“இல்லை சார், நான் ஆங்கிலத்துல “கிராமர்” தெரியலைன்னு தான் சொன்னேன் அவரு தப்பா புரிஞ்சிகிட்டாரு….” என்று பாவமாக கூற…

“படிக்கத் தெரியாதவன்-னு ஏதேதோ சொல்லி ஏமாத்தப் பாக்குறியா…? என்று மாணவியின் தந்தை கேட்டார்,

“படிக்கத் தெரியலன்னு சொல்லுரிங்க, “கிளாமர்” மட்டும் எப்படி தெரிந்தது…?

“அது எப்படியோ தெரிந்தது, அதெல்லாம் இருக்கட்டும்… நீ எப்படி என் பொண்ணப் பார்த்து அப்படி கேட்கலாம்?” என்று மீண்டும் ஆரம்பிக்க...,

ஆங்கில ஆசிரியர் தடுமாறிப் போனார்… அந்த நிகழ்ச்சியை நினைத்து இன்றும் சிரித்துக் கொண்டிருந்தனர்….

“என்னடா அங்க சிரிப்பு?” ஆசிரியர் சத்தம் போட,

“………………………..” அமைதியானார்கள்.

“நீங்க ஒன்னா சேர்ந்தாலே இப்படித் தாண்ட சிரிக்கிறீங்க, முதல்ல உங்க 4 போரையும் தனித் தனியா உட்கார வைக்கணும்”

“எங்களை யாராலையும் பிரிக்க முடியாது சார்!” என்று கூறினான் பிரவீன்.

ரு நாள், மதிய சாப்பாட்டின் போது…

ஹர்ஜன் கொண்டுவந்த “சாம்பார்” சாதத்தை அவனது நண்பர்கள் முழுவதுமாக சாப்பிட்டு விட… ஹர்ஜன் ஓ… வென அழுதான். பின்பு அவனது நண்பர்கள், தங்களது சாப்பாட்டை அவனுக்குக் கொடுத்தனர்…

“இத பாரு ஹர்ஜன், உங்க அம்மா செய்யிற சாம்பார் சாதம் ரொம்ப நல்லா இருந்தது. அதனால தான் நாங்க சாபிட்டுடோம், இனிமேல் நீ சாப்பாடு எடுத்து வரும் போது கொஞ்சம் அதிகமாவே எடுத்துகிட்டு வா, என்ன சரியா?…”

“ம்ம்…சரி!” என்று சொன்னதோடு தினமும் அவர்களுக்காகவே தனியாக ஒரு சாப்பாட்டு டாப்பாவையும் வாங்கி சாப்பாடு எடுத்து வந்தான் ஹர்ஜன்…..

மாதங்கள் வருடங்களாக கடந்தது…

8-ம் வகுப்பிற்கு தேர்ச்சி பெற்று வந்தனர்……

தமிழ் ஆசிரியர் பாடம் நடத்தி விட்டு…..

“எல்லாரும் வீட்டுல நல்லா படிச்சிட்டு வாங்க, நாளைக்கு இந்தப் பாடத்திலருந்து கேள்வி கேட்பேன், நாளைக்கு அடுத்தப் பாடத்துக்குப் போகலாம். சரியா?”

“சரி ” என்று எல்லா மாணவர்களும் கூறினார்கள்.

பிரவீனிடம் தமிழ் புத்தகம் இல்லாததால், ஹர்ஜனிடம் புத்தகம் கேட்டான்,

“ஐயோ! நான் தரமாட்டேன்பா, படிச்சிட்டு வரலைனா நாளைக்கு தமிழ் வாத்தியாரு அடிப்பாரு. நீ வேணும்-னா எங்க வீட்டுக்கு வா ரெண்டு பேரும் ஒன்னா படிப்போம்” என்றான் ஹர்ஜன்.

ப்ரவீனும் சரி என்று சொல்லி சென்றான்… ஆனால், நாளை இவர்களது நட்பே முறியப் போகிறது என்பதை யாருமே அறிந்திருக்க வில்லை!!

மறு நாள்… ஆசிரியர் கேள்விகளை கேட்டு விட்டு அடுத்தப் பாடத்திற்கு சென்றார்….

அவர் ஆரம்பித்தப் பாடம்……

8ம் வகுப்பு தமிழ் பாடத்தின்…..

“அண்ணல் அம்பேத்கார்!”

தீண்டாமைக்கொடுமை” என்ற தலைப்பில், ஆரம்பித்து…. அம்பேத்கார் அனுபவித்த எல்லா விதமான கொடுமைகளையும் படம் பிடித்துக் காட்டுவது போல் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்… பிஞ்சுகளின் காதுகளில் போட்ட நஞ்சு விதை, காது, மூக்கு, தொண்டை வழியே நெஞ்சுக்குள் இறங்கியது….! விதை போட்டவுடனேயே வேர்விட்டு பூத்துக் குளுங்கவும் செய்தது…!

நண்பர்களது பார்வை, ஹர்ஜன் பக்கம் திரும்பியது! பாடத்தை ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் ஹர்ஜன். மெதுவாக ஹர்ஜனிடம் இருந்து கொஞ்சம் தள்ளி அமர்ந்தான் பிரவீன்!

சத்யா, பிரவீனிடம் கேட்டாள் ” தாழ்த்தப்பட்டவன்-னா, தொட்டுப் பேசக் கூடாதாடா? நம்ம ஹர்ஜன் தாழ்த்தப் பட்டவன் தானே?… அன்னைக்கு புத்தகம் குடுக்கும் போது சார் சொன்னாருல்ல… அப்போ நம்ம ஹர்ஜன் தீண்டத் தகாதவனா?”

“இத பாரு சத்யா… அவனை இனிமேல நம்ம ஹர்ஜன்-னு சொல்லாதே!” என்றான் சங்கர்.

“ஏண்டா, அவன் பாவம் தானே?”

“இத பார், உனக்கு ஒன்னும் தெரியாது! பேசாம இரு…” என்று ஆத்திரப்பட்டான் பிரவீன்.

பள்ளி நேரம் முடிந்து விட, “பாடத்தை நாளை தொடர்கிறேன்..!” என்று சொல்லி முடித்தார் ஆசிரியர். அனைவரும் வீட்டிற்குக் கிளம்பினர்,

“பிரவீன், இன்னிக்கும் எங்க வீட்டுக்கு வந்துடு, ரெண்டு பேரும் ஒன்னா படிப்போம்” என்று சொன்னான் ஹர்ஜன்.

“இத பாருடா, இனிமேலே நீ என் பெயரை சொல்லிக் கூப்பிடாதே…” என்றான் பிரவீன்!

“ஆமாடா, என்னையும் பேர் சொல்லி கூப்பிடாதே.” என்றான் சங்கர்!

“என்னடா ஆச்சு உங்களுக்கு? ஏன் ஒரு மாதரியா பேசுறீங்க?” என்று பரிதாபமாக கேட்டான் ஹர்ஜன்!

“இனிமேல் வாடா, போடான்னும் பேசாதே”

“வேற எப்படிடா பேசுறது?”

“நீ ஒன்னும் இனிமேல் எங்களோட பேச தேவையில்லை”

“ஏண்டா… புத்தகம் குடுக்கலைன்னு கோபமா?”

“உன் புத்தகமும் வேண்டாம், ஒன்னும் வேண்டாம், பேசாதேன்னா பேசாதே!” என்று சொல்லி விட்டு நிற்காமல் சென்று விட்டனர்….

ஓடிப்போய் அவர்களை மறித்தான் ஹர்ஜன், “டேய்… நான் வேற யாரு கிட்டடா பேசுவேன்?.. இவ்வளவு நாளா நாம எல்லாம் ஒன்னா தானேடா இருந்தோம்” என்று பரிதாபமாக கேட்டான் ஹர்ஜன்!

“இவ்வளவு நாளா எங்களுக்கு இது தெரியாமல் இருந்தது! இன்னைக்கு பாடம் படிச்சியா? உன்னை எல்லாம் அப்படிதான் நடத்தனுமாம்! நீ சொன்னீயே சாமின்னு, அவரையே அப்படிதான் நடத்திருக்காங்க, நீயெல்லாம் என்ன பெரிய…. போடா!”

“அப்படி சொல்லாதீங்கடா, நாமல்லாம் ஒண்ணுடா.. என்னோட பேசுங்கடா…” என்று கூறிக் கொண்டு பிரவீன் கையை பிடித்தான் ஹர்ஜன்!

பிரவீன் முகம் கோபத்தில் சிவந்து போனது…

“யாரு கையடா பிடிக்கிற….” என்று ஆத்திரத்தில் ஹர்ஜன் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விட்டான்!…

தடுமாறிப் போய் கீழே விழுந்தான் ஹர்ஜன்! தனது பாடப் புத்தகங்கள் சிதறின… இதுவரை அவனிடம் அப்படி ஒரு கோபத்தை ஹர்ஜன் பார்த்ததில்லை…

“இத பார்! இது தான் கடைசி..! இனிமே எங்ககூட பேசணும்னு வந்தே….கொன்னே போட்டுடுவேன்!” என்ற எச்சரிக்கையுடன் சென்றான் பிரவீன்…

சத்யா மட்டும் பரிதாபப் பார்வையோடு சென்றாள்…

ஹர்ஜன், அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் அப்படியே கிடந்தான்… பக்கத்தில் கிடந்த தமிழ் புத்தகத்தின் அட்டைப்படத்தில் இருந்த அம்பேத்கர் போட்டோவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்…

ரவு முழுதும் ஹர்ஜனுக்கு தூக்கம் வரவில்லை! தனது நண்பர்களோடு விளையாடியது…. தனது சாப்பாட்டை அவர்கள் சாப்பிட்டது… பிரவீன் அடித்தது… மாறி மாறி அவன் கண் முன்னே வந்து கொண்டிருந்தது. “இது வரைக்கும் எங்களுக்கு தெரியாது, இன்னைக்கு பாடம் படிச்சியா?… உன்னை எல்லாம் அப்படிதான் நடத்தனுமாம்….” என்று பிரவீன் சொன்னது அவன் காதில் ரீங்காரமீட்டது! ஏதோ யோசித்தவன், நடு இரவில் திடீரென்று எழுந்து, தமிழ் புத்தகத்தை எடுத்து அம்பேத்கர் பாடத்தை புரட்டினான்…..

விடிந்தது….!

ஹர்ஜன் முகத்தில் ஒரு விதப் புத்துணர்ச்சி தெரிந்தது!

தனது நண்பர்களை சந்தித்தான்…. ஹர்ஜனைப் பார்த்ததும் கோபத்தோடு எழுந்தான் பிரவீன்! அவனுக்கு முன், தமிழ் பாடப் புத்தகத்தை நீட்டினான் ஹர்ஜன்!
அந்தப் புத்தகத்தை வாங்கிப் பார்த்ததும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்!!….

சற்று நேரம் அமைதி…!

பிரவீன் தனது தவறை உணர்ந்து, கர்ஜனை கட்டிப் பிடித்துக் கொண்டு மன்னிப்புக் கேட்டான். சத்யா புன்னகை செய்தாள், இப்போது அவர்களும் தங்களது தமிழ் புத்தகத்தை எடுத்தனர்…..

குப்பறை!

ஆசிரியர், எப்போதும் போல் நேற்று நடத்திய பகுதியிலிருந்து கேள்விகளை கேட்கத் தொடங்கினார்….

“அம்பேத்கரைப் பற்றி நீங்க என்ன திரிஞ்சுகிட்டீங்க? சொல்லுங்க பார்ப்போம்?”

பிரவீன் எழுந்தான், “அம்பேத்கார் ஒரு சட்ட மாமேதை!”

” ம்… அப்பறம்?

“அம்பேத்கார் சாமி?”

“என்னது..! சாமியா? ஓ..அவர் சாமிக்கிட்ட போய்ட்டாருன்னு சொல்லுரியா? அது இல்லப்பா, அம்பேத்கார் தன்னோட இளமை வயசுல அனுபவித்த கொடுமைகள் என்னென்ன…? இந்தக் கேள்வி உங்களுக்கு தேர்வில் கண்டிப்பா வரும்!

ஹர்ஜன் எழுந்தான், “அம்பேத்கார் ஒரு சட்ட மாமேதை! அம்பேத்கர் சாமி!”

“என்னடா, வீட்டுல பாடம் படிக்கலையா?” கோபமாகக் கேட்டார் ஆசிரியர்!

“நான் நல்லா படிச்சிருக்கேன் சார்! நான் சொல்லுறேன்” சத்யா கூறினாள்!

“வெரிகுட்..! எங்கே சொல்லு பார்ப்போம்?”

“அம்பேத்கார் ஒரு சட்ட மாமேதை! அம்பேத்கர் சாமி!”

ஆசிரியர் கோபமாக, “என்னடா… கிண்டல் பண்ணுறீங்களா?

“இல்லை சார், நாங்க படிச்சதை தான் சொல்லுறோம்!”

“நல்லா படிச்சி கிழிச்சிங்க… இப்படி படிச்சிங்கன்னா, அடுத்த வருஷமும் இதே வகுப்புல தான் இருக்கணும். பாடத்துல அப்படியா போட்டுருக்கு? கொண்டாங்கடா புத்தகத்தை…”

சங்கர் எழுந்து சென்று புத்தகத்தை கொடுத்தான்…

புத்தகத்தை வாங்கி பார்த்தவர் அதிர்ச்சியடைந்தார்!!

எதையோ சாதித்து விட்டோம்; என்ற இறுமாப்பு மாணவர்களின் பார்வையில் தெரிந்தது!

புத்தகத்தை, பக்கம் பக்கமாக புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார் ஆசிரியர்!…

“எங்கேடா, உன் புத்தகத்தைக் கொண்டா…” என்று அனைவரது புத்தகத்தையும் வாங்கிப் பார்த்து விட்டு அதிர்ச்சி தாங்க முடியாமல்

“எங்கேடா அம்பேத்கர் பாடம்…!?” என்று கேட்டார் ஆசிரியர்!

“கிழிச்சிட்டோம்!” என்று எல்லோரும் ஒரே குரலில் கூறினர்.

“ஏண்டா கிழிச்சிங்க?”

“அந்தப் பாடம் எங்களுக்குத் தேவை இல்லை!”

“அடப்பாவிங்களா… இந்த சின்ன வயசிலயே ஜாதி பிரச்சினையை தூண்டுறீங்களா? நீ எந்த ஜாதிக்காரண்டா? நீ எந்த ஜாதிக்காரண்டா?” என்று கேட்டு, அடிக்க கையை ஓங்கினார்…

“நிறுத்துங்க சார்!” சத்தமாகக் கூறினான் ஹர்ஜன்!

ஆசிரியர், அப்படியே நின்று போனார் அதிர்ச்சியில்!

“யாரு சார் ஜாதிப் பிரச்சினையை தூண்டுறது? நாங்களா….? நேத்து வரைக்கும் நாங்க எவ்வளவு ஒத்துமையா இருந்தோம் தெரியுமா? நாங்கல்லாம் என்னென்ன ஜாதிக்காரங்கன்னு எங்களுக்கு தெரியும் சார்! ஆனா, இந்த ஜாதிக் காரணை இப்படி தான் நடத்தணும்னு, இந்தப் பாடத்தை படிச்சதுக்கு அப்புறம்தான் தெறிஞ்சிக்கிட்டோம்! அம்பேத்கர்-னா சாமின்னு மட்டும்தான் நாங்கல்லாம் நினைச்சிருந்தோம், ஆனா அவர் இந்த ஜாதியில பொறந்தவர்னும், இப்படியெல்லாம் கொடுமையை அனுபவிச்சார்னு இப்ப தான் தெறிஞ்சிக்கிட்டோம்!"

"...................................." ஆசிரியர், மௌனமானார்…

ஏன் சார்…, அம்பேத்கர் வாழ்க்கையில இதைத் தவிர வேற ஒண்ணுமே நடக்கலையா சார்? பாடம் முழுக்க கொடுமை, கொடுமைனு ஒரே விஷயத்தை சொல்லிருக்காங்களே… இதைத் தவிர அவரோட வரலாறுல வேற எதையுமே பாடமா வைக்க முடியாதா சார்?”

"..........................." ஆசிரியர், பேச வார்த்தைகள் இல்லாமல் மௌனமானார்…

“ஆமா சார், இந்தப் பாடத்தை படிச்சதுக்கு அப்பறம் தான் என் மனசுல ஒரு பிசாசு உருவானது.” என்று பிரவீன் கூறினான்.

“பசங்களா…, ஜாதி கொடுமைங்கறது, அம்பேத்கருக்கு பிறகு வந்ததில்லை, அவர் காலத்துக்கு முன்னாடியே இருந்திருக்கு! அதனால தான் அவருக்கு அந்த நிலைமை.

ஹர்ஜன் பேசத்தொடங்கினான்…

”அது எங்களுக்கும் தெரியும் சார்! நாங்க சொல்லுறது இன்னைக்கே மாறிடும்னு இல்லை. இந்தப் பாடத்தை மாத்திட்டா, இனிமேல் வரக்கூடிய சந்ததியினருக்கு, இப்படி ஒரு நிலமை இருந்ததுன்னு தெரிஞ்சிக்க வாய்ப்பு இருக்காதுன்னு சொல்லுறோம்."

".................................."

"பொதுவா, தாழ்த்தப் பட்டவங்கன்னு சொன்னவுடனே எல்லோருக்கும் நினைவுக்கு வரது குறிப்பிட்ட ஒரு ஜாதி மட்டும் தான் சார், அதுக்கு காரணம் இந்தப் பாடம்!

"....................................."

"அதனால தான் இந்த பாடம் வேண்டாம்னு சொல்லுறோம். எங்களோட வயசுக்கே இவ்வளவு யோசிக்கிறோம், நீங்க எல்லாரும் யோசிக்க ஆரம்பிச்சா, இன்னிக்கே மாத்தலாம். அப்படி யோசிச்சிங்கன்னா…. நாளைக்கு பிறக்கிற புது வருஷம், இந்தியா வல்லரசா ஆகுறதுக்கான முதல் படியா இருக்கும்! அப்படி இல்லைன்னா, இன்னைக்கு இந்த பாடத்தை கிழிச்சோம்… இன்னும் 10 வருஷம் ஆனா, இந்த நாட்டுல இருக்கிற எல்லா தேவை இல்லாததையும் கிழிப்போம்.!!!!!!(?)

“ஆம்! இந்தச் சிறுவர்கள், அறியாத வயது என்பதால், பாடத்தையே கிழித்து விட்டனர்! ஆனால், வயதிலும், படிப்பிலும், அறிவிலும் பெரியவர்களாக இருக்கும் நாம், பாடத்தில் சில பகுதிகளை நீக்கினாலே போதும்! சரி செய்யவே முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்த இந்த நோய்க்கு மருந்து கிடைத்து விட்டது! ஆனால், இதை யாரிடம் சொல்வது? இதை யார் செயல் படுத்துவது?

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், யாரிடம் முடிவு கேட்பது என்பது புரியாமல், ஆசிரியர் சிலையாகிப் போனார்!

பள்ளி நேரம் முடிந்து மணி ஒலிக்க… விடுதலை கிடைத்து விட்டதைப் போல், வேகமான நடையோடு, ஹர்ஜனுடன் புறப்பட்டனர் மாணவர்கள்!

“ஹர்ஜன்” (குறும்படம், சிறுகதையாக…) Harjan
2000-மாவது ஆண்டின், வருடப் பிறப்பு சிறப்பு நிகழ்ச்சிக்காக…..

படைப்பு, - எஸ்.என்.குயிலன்.
“அந்தப்பார்வை”To a brave heart Nothing is impossible!
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!