திருமண வீட்டில் வாழை மரம் கட்டுவது ஏன்?


ANTHAPPAARVAI

திருமண வீட்டில் வாழை மரம் கட்டுவது ஏன்?

நமது முன்னோர்கள் காரண காரியம் இல்லாமல் எதையும் சொன்னதும் இல்லை, செய்ததும் இல்லை. நமக்கு கற்பிக்கப் பட்ட காரணங்கள் தான் தவறாக இருக்குமே தவிர, முன்னோர்கள் சொன்னதில் தவறொன்றும் இருந்ததில்லை. பழங்காலத்தில் திருமண வீடுகளில் மட்டுமே வாழை மரம் கட்டப்பட்டது. ஏனென்றால் அதில் நமது கலாச்சாரமும், பண்பாடும் அடங்கி இருக்கிறது.

"வாழை மரம்" ஒரு முறை தான் பூத்து காய் காய்க்கும், அதுபோல் மனித வாழ்வில் "ஒரு முறை தான்" திருமணம் நடைபெற வேண்டும் என்பதை குறிப்பால் உணர்த்தவே வாசலில் வாழை மரத்தை கட்டி வைத்தார்கள். இன்று அநாகரிகமாக "எயிட்ஸ்" விழிப்புணர்வு
விளம்பரங்கள் செய்கிறார்களே, இதை அப்போதே அழகாக செய்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள். புரிந்துகொள்ள முடியவில்லை என்பதற்காக மூட நம்பிக்கை என்று விமர்சனம் செய்வது அறியாமை!.

வாழைக்கு ஒரு தார், வாழ்க்கைக்கு ஒரு தாரம்!!

வாழையில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கிறது என்பதெல்லாம் அறிவியல் வளர்ச்சியடைந்த நிலையில் தான் கண்டறியப் பட்டது. ஆனால் அன்றைய கால கட்டங்களில் அறிவியல் என்றால் என்னவென்றே தெரியாது. அப்படியே இருந்தாலும், மற்ற சமயங்களில் மனிதனுக்கு அந்த மருத்துவ குணங்கள் தேவைப்படாதா? எனவே திருமண வீடுகளில் வாழை மரத்தை கட்டியதற்கு அது காரணமாக இருக்க முடியாது!

மேலும் வெட்ட வெட்ட வளரும் என்பதற்காகவும் இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் முருங்கை மரம் கூடத்தான் வெட்ட வெட்ட வளரும்! வாழை மரத்தில் கூட வாழை நார் சில நேரங்களில் ஒதுக்கப்படும், ஆனால் முருங்கையில் வேறிலிருந்து, பட்டை வரை எல்லா பாகங்களும் பயன்படும். முருங்கையிலிருந்து வடியும் ஒருவகை பசை கூட மருத்துவ குணம் கொண்டது. அதோடு முருங்கை மரம் எளிதிலும் கிடைக்கும். அப்படியானால் முருங்கை மரத்தை கொண்டு கட்டியிருக்கலாமே....

மேலும், காலம் முழுதும் சேர்ந்து வாழவேண்டும் என்று வாழ்த்துவதுதான் முறையாகுமே தவிர, பிரிந்து மறுபடியும் சேர்ந்து வாழ வேண்டும் என்று வாழ்த்துவது முறையாகாது! அதுமட்டுமல்லாமல், வெட்டுதல், பிரித்தல் போன்ற அமங்களச் சொற்களையெல்லாம் திருமண காலங்களில் குறிப்பிட்டுக் காட்ட மாட்டார்கள் அக்காலத்து மக்கள்!!

நாம் நன்கு கவனித்துப் பார்த்தோமேயானால் ஒரு உண்மை புரியும். அதாவது திருமண வீடுகளில் வெறும் வாழை மரத்தை மட்டும் கட்டி வைக்க மாட்டார்கள். அந்த வாழை மரத்தில் கண்டிப்பாக வாழைத் தார் இருக்கும்! அதோடு வாழைப் பூவும் இருக்கும்!! இந்த அமைப்பிற்காக வாழைமரத்தை தேடிப் பிடித்து வாங்கி வருவார்கள். அதுவும் சாதாரணமாக இல்லை, இதற்காக மாட்டு வண்டி பூட்டப் பட்டு, அந்த வாழைத்தாரில் உள்ள பூ உடைந்து விடாமல் மிகவும் கவனமாக, ஒரு சிறிய விழாவாகவே இந்த வாழைமரம் கொண்டுவரப் பட்டிருக்கிறது.

வாழையடி வாழை என்பதற்காகவும், வெட்ட வெட்ட வளரும் என்பதற்காகவும், மருத்துவ குணங்களுக்காகவும் வாழைமரம் கட்டப்பட்டிருந்தால் வெறும் வாழை மரத்தைக் கூட கட்டியிருக்கலாமே.... ஏன் அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? மேலும் அங்கே இரண்டு வாழை மரங்கள் கட்டப்படும். அதில் ஒன்று சிறியதாகவும், ஒன்று பெரியதாகவும் இருக்கும். ஏனென்றால் ஆணுக்கொன்று, பெண்ணிற்கொன்று.! அதுமட்டுமல்ல, இரண்டு மரங்களின் வாழைப்பூக்களும் ஒன்றாக இணைத்துக் கட்டப் பட்டிருக்கும். அது ஏனென்றால், மணமக்கள் அக்கினி ஊர்வலம் வரும் போது அவர்களது வேட்டியும் சேலையும் சேர்த்துக் கட்டப்பட்டிருக்குமே அதை உணர்த்துவதற்காகத் தான்.

தார் வந்த ஒரு வாழை மரத்தை பாதியாக வெட்டி விட்டால், தண்டு முற்றவில்லையானால் அந்த மரம் மீண்டும் வளரும், மீண்டும் இலை வரும். ஆனால் அதிலிருந்து மீண்டும் வாழைத் தார் வராது. வாழைக்கு ஒரு தார் என்பது இயற்கை. இதைப் போலவே மனம் முடிக்கும் தம்பதிகள் இருவரும் ஒருவனுக்கு ஒருத்தியாக வாழவேண்டும் என்பதை சுட்டிக்காட்டி உணர்த்தவே இந்த வாழைமரம் பயன் படுத்தப்பட்டது.

"வாழையடி வாழை" என்று வாழ்த்துவது கூட வாழை மரத்தைப் போல் வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்குத்தான். வாழை மரம் எப்படி ஒரு தாருக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கிறதோ, அதைப்போலவே ஏற்றுக் கொண்ட தாரத்திற்காகவே தங்களது வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும் என்பதையே குறிக்கும். வாழை எப்படி மறு தார் அனுமதிப்பதில்லையோ, அதைப்போலவே மனிதனும் மறு தாரத்தை அனுமதிக்கக் கூடாது என்பதற்காகவே சொல்லப்பட்டது.

"வாழையடி வாழை" என்பதை வாழ்க்கை முழுவதும் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்று எப்படி அர்த்தம் கொள்ள முடியும்? வாழ்க்கை என்பது குழந்தை பெற்றுக் கொள்வது மட்டும் அல்ல. வாழ்க்கை என்பது ஒரு கட்டுப்பாடு! வாழ்க்கை என்பது ஒரு நெறி! இப்படித்தான் வாழவேண்டும் என்ற ஒரு கொள்கை! அதற்கு இந்த வாழை மரம் ஒரு உதாரணமாகக் காட்டப்பட்டிருக்கிறது!!"To a brave heart, Nothing is impossible"
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!