பலி கேட்கும் பயணங்கள்: உரத்த சிந்தனை, டாக்டர் ஏகநாதன் பிள்ளை


avatar

இன்று, இயற்கை மரணங்கள் மற்றும் நோயால் ஏற்படும் மரணங்களை விட, விபத்துகளால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது. உலகிலேயே, இந்தியாவில் தான் சாலை விபத்துகளால், அதிக அளவில் இறப்பு ஏற்படுவதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த, 2009ல், எடுக்கப்பட்ட ஆய்வுப்படி, இந்தியாவில், 1.43 லட்சம் பேர், சாலை விபத்துகளில் பலியாகி உள்ளனர். 2010ல், பலியானவர்கள் எண்ணிக்கை, 4.1 சதவீதம் அதிகரித்துள்ளது. சராசரியாக, ஆண்டு தோறும், ஒரு லட்சம் பேருக்கு மேல், சாலை விபத்துகளில் இறக்கின்றனர். வளர்ந்த நாடுகளில், சாலைப் போக்குவரத்து விதிமுறைகள், நன்கு திட்டமிட்டு, பின்பற்றப்பட்டு வருகின்றன. இதனால், அங்கு சாலை விபத்துகளை குறைப்பதில், வெற்றி பெற்றுள்ளனர்.

சீனாவில், மக்கள் தொகை அதிகம், ஆனால், சாலை விபத்துகள் குறைவு; அமெரிக்காவில் வாகனங்கள் அதிகம், ஆனால், அங்கு சாலை விபத்துகள் குறைவு. இந்தியாவில் மட்டும் ஏன், இப்படி ஒரு நிலைமை. இந்தியாவில், சாலை விபத்துகளால், நிமிடத்திற்கு ஒருவர் பலியாகிறார்; நான்கு பேர் காயமடைகின்றனர். இதில், வாகன ஓட்டுனர்களின் தவறும் முக்கிய காரணமாகிறது. போதுமான அளவு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படாததும், இத்தகைய விபத்துகளுக்கு காரணமாக இருக்கலாம். இப்படியே போனால், 2030ல், எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் சர்க்கரை வியாதியை விட, சாலை விபத்து களால் உயிர்பலி அதிகரித்துவிடும்.

எண்ணிக்கை அதிகம்:

விழுப்புரம் மாவட்டம், தமிழகத்திலேயே அதிகம் பேர் விபத்துகளில் உயிரிழக்கும் மாவட்டமாக, முதலிடத்தைப் பிடித்துள்ளது. விபத்தைத் தடுப்பதற்கு, நான்கு வழிச்சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், விபத்துகளைத் தடுக்க முடியவில்லை. வாகன ஓட்டிகளின் அதிவேகம், குடிபோதையில் வாகனம் ஓட்டுவது ஆகியவையே, விபத்துகளுக்கு காரணமாக இருக்கின்றன. இரவு, 9 முதல், அதிகாலை 5 மணி வரை, 75 சதவீதம் விபத்துகள் நடக்கின்றன; 25 சதவீதம் விபத்துகள், பகல் நேரத்தில் நடக்கின்றன. பெரும்பான்மையான விபத்துகளில், இள வயதினர், 20 முதல், 30 வயதுடையவர்கள், குறிப்பாக கல்லூரி மாணவர்கள், குடும்பத்தின் ஆணி வேரான இளம் வயது குடும்பத் தலைவர்கள், எதிர்காலத்தில் சிறந்த வல்லுனர்களாக பரிமளிக்கும் வாய்ப்புள்ள இளைஞர்களின் உயிர்கள், கண நேரத்தில் பறிக்கப்படுகின்றன. மேலும், 14 வயது மகனையோ அல்லது மகளையோ, இரு சக்கர வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோரை, "பொறுப்புள்ள பெற்றோர்' என, எப்படி ஏற்றுக் கொள்வது? மின்சாரத்திலோ அல்லது நெருப்பிலோ தங்கள் குழந்தைகள் விளையாடுவதை அனுமதிக்காத பெற்றோர், இவ்விஷயத்தில் மட்டும் ஏன் அலட்சியம் காட்டுகின்றனர்?

முக்கிய காரணங்கள்:

உரிய வயதாவதற்கு முன், குழந்தைகளை வாகனங்களை ஓட்ட அனுமதிக்கக் கூடாது. இல்லாவிடில், அவர்களுக்கு வயதே ஆகாது என்ற, புகழ்பெற்ற மேற்கோளை எல்லா பெற்றோரும் மனதில் நிறுத்தி கொள்ள வேண்டும். மனிதத் தவறுகளால் மட்டுமே, 98 சதவீத விபத்துகள் நிகழ்வதாகவும், ஆய்வறிக்கைகள் தெரியப் படுத்துகின்றன.

காவல் துறையின் பங்கு:

சட்டத்தை நடைமுறைப்படுத்துகிறவர்கள் என்ற வகையில், காவல் துறையின் பங்கு, இதில் மிக முக்கியமானது. போக்குவரத்து காவல் துறையினர், மிக மிக கண்டிப்புடன் சாலை விதி மீறல்களை தண்டிக்கத் தொடங்கினால், சாலை விபத்துகள் பெருமளவில் குறையும். குறைந்த வேகத்தில் செல்லும் பெரும்பாலான வாகன ஓட்டிகள் குறிப்பாக லாரிகள், பஸ்கள், மேலும் சில கார்கள் கூட, இடது ஓரமாகச் செல்லாமல், வலது ஓரமாகவே நெடுஞ்சாலைகளில் செல்கின்றன. "தினமலர்' நாளிதழ் சுட்டிக் காட்டியும், அந்த தவறு தொடர்கிறது. "ஹைவேஸ்' ரோந்து படை, இந்த தவறை சரி செய்ய முயற்சிக்க வேண்டும்.

தீவிர கண்காணிப்பு தேவை:

நாம் எல்லாருமே, சாலை விதிகள் குறித்து மிகவும் தாழ்ந்த மதிப்பீடு வைத்திருக்கிறோம். அவை அனைத்தும், நம் பாதுகாப்பு கருதியே உருவாக்கப்பட்டவை என்பதை, மிகவும் சுலபமாக மறந்து விடுகிறோம். சாலை அறிவிப்புகளை யாரும் கண்டு கொள்வதோ, மதித்து நடப்பதோ இல்லை. நமக்கு விபத்து நடக்காது என்ற, மதியீனமான எண்ணம், நம்மில் பலர் மனதில் உள்ளது. இதுவும் ஓர் கசப்பான உண்மை. பெற்றோரும், ஆசிரியர்களும், சிறுவயது முதலே குழந்தைகளுக்கு சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டிய அவசியத்தை, தெளிவாக மனதில் பதிய வைக்க வேண்டும். அரசிற்கும் இதில்கணிசமான பங்கு உண்டு.

குஜராத் ஒரு முன்னுதாரணம்:

குஜராத் மாநிலத்தை, இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். அங்கு, கடந்த சில ஆண்டுகளில் சாலை விபத்துகளும், மரணங்களும் குறிப்பிடும்படியான அளவு குறைந்திருப்பதாக, புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதற்கான காரணங்களும், சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அவை:

* சாலை அறிவிப்புகள் எல்லா பாடப் புத்தகங்களிலும், முதல் மற்றும் கடைசிப் பக்கங்களில் அச்சிடப்பட்டுள்ளன.

* சாலைப் பாதுகாப்பு அறிவிப்புகள், எல்லா பள்ளிகளிலும், எல்லாரும் பார்க்குமிடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

* ஓட்டுனர் உரிமம் பெறுகிறவர்களுக்கு, பாதுகாப்பான பயணம் குறித்து, முதல்வர் எழுதிய கடித நகல் கொடுக்கப்படுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன், மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மட்டும், இந்தியாவின் ஒட்டுமொத்த சாலை விபத்துகளில், 12 சதவீதம் நடந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளாக, அது, 4 சதவீதமாக குறைந்துள்ளது. அதற்காக கூறப்படும் காரணம். தீவிரமான, கண்டிப்பான சட்ட அமலாக்கமும், தண்டனைகளும் தான். தமிழகத்தில், பெரும்பாலான விதிமீறல்களுக்கும், தண்டனை மிகவும் குறைவு. உயிரிழப்பு ஏற்பட்டால் கூட, வாகன ஓட்டிக்கு அபராதம், 2,000 ரூபாய். தற்போதுள்ள தண்டனைகளை கடினமாக்கி, ஓட்டுனர் உரிமம் ரத்து செய்வது வரை உயர்த்தி அமல்படுத்தினால், விபத்துகள் நிச்சயமாகக் குறையும்.

நிரந்தரத் தீர்வு:

வாகன ஓட்டிகளுக்கு போதிய பயிற்சி இன்மையே, இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இதற்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், பிளஸ் 2 மட்டத்திலேயே ஓட்டுநர் பயிற்சியைக் கட்டாயமாக்க வேண்டும். சில பள்ளிகளை இணைத்து, ஒரு இடத்திலும் சிமுலேட்டர் அமைத்து, மாணவர்களுக்கு ஓட்டுநர் பயிற்சி தரலாம். இந்த முறையான பயிற்சி, எதிர்காலத் தலைமுறையினருக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இதற்கான முதலீட்டுச் செலவிற்காக, மாணவர்களிடம் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம். இந்த முயற்சியில், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியை நாடலாம். வாகனங்களை ஓட்டுவதற்கான விதிகள் மற்றும் சாலை விதிகளுக்கென, தனியாக பாடத்திட்டம் வகுத்து, வாரம் இரண்டு மணி நேரமாவது நேரம் ஒதுக்கி, இதைக் கற்றுத் தர வேண்டும். இதை தேர்விலும் சேர்த்து, மதிப்பெண் வழங்க வேண்டும். வாகனம் ஓட்டும் முறை மற்றும் சாலை விதிகளை நமது இளைஞர்களுக்கு கட்டாய பாடத் திட்டமாக்குவோம்; எதிர்காலத் தலைமுறையினருக்கு பாதுகாப்பான வாழ்க்கை முறையை ஏற்படுத்தித் தருவோம். இ-மெயில்: ahanathapillai@gmail.com

LIKE0DISLIKE0

I Like this post.

I Report this post.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!