சோதிடம்! உண்மையா / பொய்யா?


ANTHAPPAARVAI


சோதிடம்!
பல காலங்களாக இது உண்மையா? பொய்யா? நம்பலாமா? வேண்டாமா? என்று பலரும் பல கோணங்களில் அலசியிருக்கலாம். ஆனால் இதுவரை எந்த தெளிவான முடிவையும் யாரும் சொன்னதில்லை. சிலரோ, சோதிடத்தில் பாதி உண்மை, பாதி பொய் என்றும் கூறுகின்றனர். இதில் எந்தப் பாதி உண்மை? எந்தப் பாதி பொய்?
எனது அறிவுக்கு எட்டிய வரையில் சோதிடம் என்பது 100% உண்மை! அதுமட்டுமல்ல சோதிடமும் ஒரு வகையில் அறிவியல்தான். இன்னும் சொல்லப்போனால் சோதிடத்தை "மூடநம்பிக்கை" என்று சிலர் விமர்சனம் செய்வார்கள் ஆனால் சோதிடம் மூடநம்பிக்கை இல்லை, அதுதான் "தன்னம்பிக்கை"!

சோதிடம் என்பது "சோ + திடம்". அதாவது சோதனைகளைத் தாங்கக்கூடிய மனோதிடம் என்று தான் பொருள். உதாரணமாக நாம் சாலையில் நடந்து செல்லும்போது ஒரு சிறிய முள் குத்திவிட்டால் "ஐயோ!.. அம்மா" என்று கத்தி விடுகிறோம் ஆனால் மருத்துவமனையில் 2அங்குல ஊசியை நம் உடம்பில் குத்தும் போது நாம் அவ்வாறு கத்துவதில்லை. ஏன்...?

சாலையில் குத்திய முள், நாம் எதிர்பார்க்காமல் நடந்தது. அதனால் நம்மால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால் மருத்துவமனையில், 2அங்குல ஊசி நம் உடம்பில் குத்தப் போவது நமக்கு முன் கூட்டியே தெரிந்தது. அதனால் அதை நம்மால் தாங்கிக் கொள்ள முடிகிறது. இந்த மனோதைரியத்தை தான் சோதிடமும் தருகிறது!.

அதற்காகத் தான் சோதிடமும் உருவக்கப்பட்டது. சோதிடத்தில் நடக்கப் போவதைத் தெரிந்து கொள்ள மட்டுமே முடியும். ஆனால் அதை சரிசெய்ய முடியாது. இதைத் தான் பாதி பொய் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். அதாவது, சோதிடம் மூலம் நடக்கப் போவதை தெரிந்துகொள்ள முடியும் என்ற பாதி உண்மை. சோதிடம் மூலம் எதையும் சரி செய்ய முடியும் என்ற பாதி பொய்!

மனித வாழ்க்கை என்பது முடிவு செய்யப்பட்டது. இதில் எப்போதும் எந்த மாற்றமும் யாராலும் செய்ய முடியாது. இன்னும் எளிதில் புரியும்படி சொல்ல வேண்டுமானால், நீங்கள் திரைப்படம் பார்த்திருப்பீர்கள், அதில் எதாவது ஆபத்து நடக்கப் போவது போல் காட்சி வந்தால் நம் மனது தவிக்கும், எந்த ஆபத்தும் நடந்து விடக்கூடாது என்று நாம் நினைப்போம். ஆனால் ஆபத்து நடக்க வேண்டும் என்று நாம் நினைப்பதால் நடந்து விடப்போவதும் இல்லை, நடக்கக் கூடாது என்று நினைப்பதால் நடக்காமல் இருக்கப் போவதும் இல்லை. ஏனென்றால் சினிமா என்பது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று. அதில் என்ன எடுக்கப்பட்டதோ அதுதான் நடக்கும்.

இதைத்தான் "உலகம் ஒரு நாடகமேடை, நாமெல்லாம் அதில் நடிகர்கள்" என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். சினிமா என்பது பொய்யானது என்பதும், வெறும் நடிப்பு என்பதும் நமக்குத் தெரியும் அப்படி இருந்தும் சில மணித்துளிகள் நம் மனது வேதனைக்கு உள்ளாகிறது. இந்த வேதனை அடுத்த முறை அந்த திரைப்படத்தை பார்க்கும் போது இருப்பதில்லை ஏனென்றால் என்ன நடக்கும் என்பது நமக்கு தெரிந்துவிட்டது.!

எனவே, என்ன நடக்கப் போகிறது என்று தெரிந்தால் நாம் அதற்கு தயாராகிவிடுவோம். அப்போது தேவையில்லாத வேதனை இருக்காது. இதற்காகத் தான் மனிதன் சோதிடத்தைக் கண்டுபிடித்தான். "நான் ஒரு கலெக்டர் ஆகிவிடுவேன்" என்று கற்பனையில் வாழ்ந்து கொன்டிருப்பது தன்னம்பிக்கை இல்லை. அடுத்தமாதம் 10ம்-தேதி எனக்கு ஒரு கை உடைந்து விடும், அதன் பிறகு "செயற்கை கை பொருத்திக் கொன்டு அந்த இழப்பை சரி செய்ய வேண்டும்" என்று, அதற்காக தன்னை தயார் படுத்திக் கொள்கிறோமே அது தான் "தன்னம்பிக்கை"! இந்த தன்னம்பிக்கையைத் தான் சோதிடம் தருகிறது.

மீண்டும் சொல்லிக் கொள்கிறேன் சோதிடத்தால் நடக்கப் போவதை தெரிந்து கொள்ள மட்டுமே முடியும். ஆனால், சரி செய்ய முடியாது!! இதைப் புரிந்து கொண்டால் எல்லாம் புரிந்து விடும்.


-@"அந்தப்பார்வை"

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!