பஸ் விபத்தில் பலியான "ஸ்ருதி" பள்ளியின் அங்கீகாரம் ரத்து? 3 நாட்களுக்குள் பதில் அளிக்க கோரி அரசு நோட்டீஸ்!


ANTHAPPAARVAI

பஸ் விபத்தில் பலியான "ஸ்ருதி" பள்ளியின் அங்கீகாரம் ரத்து? 3 நாட்களுக்குள் பதில் அளிக்க கோரி அரசு நோட்டீஸ்! Tamil_News_large_516344
சென்னை முடிச்சூர் அருகே, பள்ளி பேருந்துக்குள் இருந்த ஓட்டை வழியாக விழுந்து மாணவி ஸ்ருதி பலியான சம்பவத்தை தொடர்ந்து, குழந்தைகள் பாதுகாப்பில் அக்கறை செலுத்தாத பள்ளியின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் அருகே, நேற்று முன்தினம் பள்ளி பேருந்துக்குள் இருந்த ஓட்டை வழியாக விழுந்து, பின் சக்கரத்தில் சிக்கி, மாணவி ஸ்ருதி, 7, உடல் நசுங்கி பலியானாள். காஞ்சிபுரம் மாவட்டக் கலெக்டர் அனிஷ் சாப்ரா மற்றும் ஏராளமான பொதுமக்கள், மாணவி ஸ்ருதி உடலுக்கு மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை 4 மணிக்கு, சிறுமி உடல், வரதராஜபுரம், புருஷோத்தமன் நகரில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

ஸ்ருதி பலியான வழக்கு தொடர்பாக, மவுன்ட் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் தினகர் விசாரணை நடத்திய பின், பஸ் டிரைவர் சீமான், சீயோன் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் விஜயன், பஸ் கான்ட்ராக்டர் யோகேஷ், கிளீனர் சண்முகம் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் மீது, அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் வாகனத்தை ஓட்டியது; வாகனத்தை ஓட்டினால் மரணம் ஏற்படும் என்று தெரிந்தும், அந்த வாகனத்தை ஓட்டியது; பழுதடைந்த வாகனம் என்று தெரிந்தும், அதை ஓட்டி உயிருக்கு பங்கம் விளைவித்தது போன்ற குற்றங்கள் செய்ததாக வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.

முதல்வர் நிவாரணம்: பள்ளி மாணவி ஸ்ருதி பலியானதற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, ஸ்ருதியின் குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், பழுதுள்ள பேருந்தை, குத்தகையின் அடிப்படையில் பள்ளி வாகனமாக இயக்கியதற்கு காரணமானவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அவசர கூட்டம்: ஐகோர்ட் உத்தரவையடுத்து, தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலர் தலைமையில் நடந்த கூட்டத்தில், போக்குவரத்துத் துறைச் செயலர், கமிஷனர், பள்ளிக்கல்வித் துறை சார்பில் செயலர், முதன்மை கல்வி அதிகாரி, போலீஸ் சார்பில், சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, சிறுமி ஸ்ருதி உயிரிழப்புக்கு காரணமான சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என கேட்டு, பள்ளி நிர்வாகத்திற்கு, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் நேற்று மாலை, நோட்டீஸ் அனுப்பியது.

நோட்டீஸ் விவரம்: குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் கவனம் செலுத்த தவறியது ஏன் என கேட்டு, மூன்று நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என இயக்குனரகம் தெரிவித்துள்ளது. பள்ளி நிர்வாகத்தின் பதிலைப் பெற்றதும், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குனர் கார்மேகம் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று, தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை. ஆனால், அலுவலகம் திறந்திருந்தது. தாம்பரம் வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தி முடிச்சூரில் நேற்று கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது. விபத்துக்குள்ளான பேருந்து, கடந்த 9ம் தேதி, தகுதிச் சான்றிதழ் (எப்.சி.,) பெற வந்துள்ளது. மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன், பேருந்தை சோதனை செய்து, தகுதிச் சான்றிதழ் வழங்கியுள்ளார்.

ஆர்.டி.ஓ., சஸ்பெண்ட்: எனவே, பழுதான பேருந்துக்கு சான்று வழங்கிய விவகாரத்தில், ஆர்.டி.ஓ., படப்பச்சாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆர்.டி.ஓ., ஆஜராக ஐகோர்ட் உத்தரவு: சிறுமி ஸ்ருதி பலியான சம்பவம் தொடர்பாக பத்திரிகைகளில் வந்த செய்தியைப் பார்த்து, ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, முதல் பெஞ்ச் தானாக முன்வந்து, வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இதில், முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: பத்திரிகைகளில் வந்த செய்தியில், சாலையில் இந்த பஸ் செல்வதற்கு தகுதியானது என, 15 நாட்களுக்கு முன் தான் ஆர்.டி.ஓ., ஒப்புதல் அளித்ததாகக் கூறப்பட்டுள்ளது. இது துரதிர்ஷ்டவசமானது. நாங்களாக இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கிறோம். பள்ளி அதிகாரிகள், போக்குவரத்து கமிஷனர் மற்றும் சாலையில் செல்வதற்கு இந்த பஸ் தகுதியானது என சான்றிதழ் அளித்த போக்குவரத்து அதிகாரிகள் ஆகியோர், நாளை (இன்று) காலை 10.30 மணிக்கு, கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அட்வகேட்-ஜெனரல் தொடர்பு கொண்டு, கோர்ட்டில் அவர்கள் ஆஜராக கேட்டுக் கொள்ள வேண்டும். என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம் என்பதையும் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!