தமிழகத்தில் சட்டம் இருக்கிறது; ஒழுங்கு இல்லை: ராமதாஸ்


avatar

கோவை:""தமிழகத்தில் சட்டம் இருக்கிறது; ஒழுங்கு இல்லை. போதை மருந்து, மதுபானத்தால் பாலியல் வன்முறைகள் பெருகியுள்ளன; குடும்ப வன்முறைகள் அதிகரிக்கின்றன'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

கோவை, காந்திபுரத்தில் பா.ம.க., சார்பில், நேற்று மது ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது. கண்காட்சியை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் துவக்கி வைத்தார்.

முன்னதாக, நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, ராமதாஸ் கூறியதாவது:

அக்கறை இல்லை: தமிழகம் மதுவால் தள்ளாடிக் கொண்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பு, குடிக்கும் வயது 25 ஆக இருந்தது. தற்போது 13 வயதிலேயே, பள்ளிச் சிறுவர்கள் கூட, குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி விடுகின்றனர். 2003ம் ஆண்டு, "டாஸ்மாக்' துவங்கியபோது, 2,800 கோடி ரூபாய் ஆண்டு வருமானம் கிடைத்தது. தற்போது, 18 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. திராவிட கட்சிகளுக்கு, மக்கள் நலனில் அக்கறை இல்லை. ஆனால், 22 ஆண்டுகளாக, பா.ம.க., மது ஒழிப்பு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.மதுக்கடைகளை, அரசே நடத்தும் கொடுமை, தமிழகத்தில் மட்டுமே உள்ளது.

ஆறு மாதம் கெடு:தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை மூட, அரசுக்கு, நாங்கள் ஆறு மாதம் "கெடு' விதிக்கிறோம். அதற்குள் படிப்படியாக, அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும்; பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். மதுக்கடைகளை அரசு மூடாவிட்டால், நாங்களே பூட்டு போட்டு, கடைகளை மூடி, போராட்டம் நடத்துவோம். தமிழகத்தில் சட்டம் இருக்கிறது; ஒழுங்கு இல்லை. போதை மருந்து, மதுபானத்தால் பாலியல் வன்முறைகள் பெருகியுள்ளன. தினமும் 100 ரூபாய்க்கு மது குடிப்பதால், தனி மனிதன் ஒருவரிடம் இருந்து, ஐந்தாண்டுகளுக்கு அரசுக்கு, ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆனால், குடிப்பழக்கம் மனிதனை மிருகமாக்குகிறது.போதையில் வரும் கணவன், மனைவியை தாக்கி, துன்புறுத்துகிறான்; மகளிடம் கூட தவறாக நடக்கிறான். மதுவை ஒழிப்பதால், இது போன்ற வன்முறைகள் நடக்காமல் இருக்கும்.இவ்வாறு, ராமதாஸ் தெரிவித்தார்.

"இனி, தனியாக நிற்கப் போகிறோம்!'"சட்டசபை தேர்தலில் கூட்டணி வைக்கும்போது, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்ற நிபந்தனையை, நீங்கள் முன் வைத்திருக்கலாமே...' என, ராமதாசிடம் கேட்டபோது, ""இனி தான், நாங்க, தனியாக நிற்கப்போகிறோமே... திராவிடக் கட்சிகளை ஒழிப்பதற்கு காலம் எங்களுக்கு இட்டிருக்கிற கட்டளை இது. தமிழகத்தில், ஒரு அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. திராவிடக் கட்சிகளை அப்புறப்படுத்த யார் முன்வருவார்கள் என்ற எண்ணம், மக்களிடம் ஏற்பட்டுள்ளது. அடுத்த தேர்தலில், மது ஒழிப்பு கொள்கையை மட்டும் முன்வைத்து, நாங்கள் தேர்தலில் போட்டியிடுவோம். நாங்கள் ஆட்சியமைத்தால், முதல் கையெழுத்தே, தமிழகத்தில் பூரண மது விலக்கு அமல்படுத்தும் உத்தரவு தான்,'' என்றார்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!