மாற்றான்… சுட்ட படமா, சுடாத படமா…?


avatar

ஹாலிவுட்டுக்கும், கோலிவுட்டுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், அதுல ‘ஹாலி’ இருக்கு, இதுல ‘கோலி’ இருக்கு என்று சிலர் சொல்லக் கூடும். ஆனால் அதையும் மீறி ‘ஜாலி’யான சொந்தமும் இருக்கிறது – அதுதான் ‘இன்ஸ்பிரேஷன்’. அதாவது ஹாலிவுட்டில் வெளியான படங்களின் கதையைத் தழுவி இங்கு புது ‘ரொட்டி’ போல சுட்டுக் காட்டுவார்கள். அதை ‘அப்பாவிகள்’ சுட்டுட்டாங்கப்பா என்று கூறுவார்கள், கோலிவுட்டிலோ அதை ‘இன்ஸ்பிரேஷன்’ என்று சொல்லிக் கொள்வார்கள்.
அப்படி ஒரு ‘இன்ஸ்பைர்’ கதைதான் மாற்றான் படக் கதை என்று புதிய டாக் கிளம்பியுள்ளது. சூர்யா நடிக்க, கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள படம் இது. இந்தப் படத்தின் கதை குறித்து கே.வி.ஆனந்த் கூறுகையில், ஷங்கருடன் விமானத்தில் ஒன்றாகப் பயணித்தபோது அவர் மூலம் கிடைத்த புத்தகம் ஒன்றில் ஒட்டிப் பிறந்த சகோதரர்கள் குறித்துப் படித்தேன். அதை அடிப்படையாக வைத்துத்தான் இந்தக் கதையை உருவாக்கினேன் என்று கூறியிருந்தார்.
அப்படீன்னா, பிரியாமணி இரண்டு வேடங்களில் நடித்துள்ள சாருலதா படத்தின் கதைக்கும், உங்க கதைக்கும் ஒரு ஒற்றுமையும் இல்லையா என்ற கேள்விக்கு நிச்சயம் ஒற்றுமை இல்லை, அது வேறு இது வேறு என்று கூறியிருந்தார்.
ஆனால் ஏற்கனவே 2003ம் ஆண்டு ஹாலிவுட்டில் வந்து விட்டஒரு படத்தின் கதையைத்தான் ‘உட்டாலக்கடி’ செய்து தனது மாற்றான் படக் கதையை ஆனந்த் உருவாக்கியுள்ளார் என்று ஒரு புதுப் பேச்சு கிளம்பியுள்ளது.
அது என்ன உட்டாலக்கடி??…. ஒரு பிளாஷ்பேக்குக்குப் போவோம்…!
மேட் டேமன், கிரேக் கின்னேர் ஆகிய இருவரும் இணைந்து நடித்த படம் ஸ்டக் ஆன் யூ (Stuck on You). 2003ல் வெளியான காமெடிப் படம். இருவரும் ஒட்டிப் பிறந்த சகோதரர்களாக நடித்திருந்தனர். இருவருக்கும் வேறு வேறு சிந்தனைகள், ரசனைகள். இதை எப்படி இருவரும் சமாளிக்கின்றனர், எப்படி தங்களது ரசனைகளை அடைய போராடுகிறார்கள் என்பதை நகைச்சுவையாக சித்தரித்திருந்தனர் இப்படத்தில்.
இதில் ஒரு சகோதரருக்கு ஹாலிவுட்டுக்குப் போய் பெரிய நடிகராக வேண்டும் என்ற ஆசை வருகிறது. ஆனால் இன்னொருவருக்கோ சினிமாவே பிடிக்காது. இதனால் இருவருக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை செம காமடியாக காட்டியிருப்பார்கள் படத்தில். இப்படம் பெரிய ஹிட் இல்லை என்றாலும் கூட பேசப்பட்ட படமாக இருந்தது.
…..இப்ப கோலிவுட்டுக்கு வருவோம். இந்தப் படத்தைத்தான் சற்று மாற்றி சூர்யாவைப் போட்டு மாற்றான் என மாற்றி விட்டார் கே.வி.ஆனந்த் என்று திரையுலகிலேயே பேசிக் கொள்கிறார்கள்.
ஏற்கனவே ஆனந்த் எடுத்த அயன், கோ ஆகிய படங்களும் கூட ஆங்கில் படங்களின் தழுவல்களே என்று பேசப்பட்டது. இருந்தாலும் அவை இரண்டும் ஹிட் ஆகி விட்டன. ஆனந்த்தும் எங்கேயோ போய் விட்டார். இப்போது மாற்றான் மூலம் ஹாட்ரிக் அடிக்க வருகிறார்.
மாற்றான்- ‘மாற்றான் தோட்டத்து மல்லிகையா’ அல்லது ஒரிஜினல் ‘மதுரை மல்லியா’ என்பதை விரைவிலேயே படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்வோம்.
ஒருவேளை ‘ரெபரன்ஸ்’ தேவைப்படுவோர் பர்மா பஜார் பக்கம் போய் ஸ்டக் ஆன் யூ படத்தின் சிடி கிடைத்தால் வாங்கிப் பார்த்து விட்டு மாற்றானைப் பார்க்கக் காத்திருக்கலாம்…!

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!