நான் ஈ - தினமலர் விமர்சனம்


avatar

நான் ஈ - தினமலர் விமர்சனம் Vm_14111
தெலுங்கில் இதுவரை தான் இயக்கிய அத்தனை படங்களையும் ஹிட் படமாக்கிய டோலிவுட் முன்னணி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் முதல் நேரடித் தமிழ் படம் தான் "நான் ஈ"! இது இயக்குநரின் முதல் தமிழ்படம் மட்டுமல்ல... ஹாலிவுட்டுக்கே சவால் விடும் முத்தாய்ப்பான படமும் கூட!

கதைப்படி, நாயகர் நானி(படத்தில் இவரது பாத்திரத்தின் பெயரும் இதேதான்...) கதாநாயகி சமந்தாவை உருகி உருகி காதலிக்கும், சமந்தாவின் எதிர்வீட்டு பேச்சுலர் இளைஞர்!நாயகி சமந்தாவுக்கும் நானி மீது காதல் உண்டென்றாலும் அதை வெளிப்படையாக காட்டாமல் நானியை இரண்டாண்டுகளாக கலாய்த்து வருகிறார். அரிசி,‌ கோதுமை, தீக்குச்சி, பென்சில்முனை உள்ளிட்ட சின்ன சின்ன தானியங்கள், பொருட்களில் எல்லாம் சிற்பங்கள் செதுக்கி அவற்றின் மூலம் உலகளவில் விருதுகளை பெறும் குறிக்கோளை உடைய சமந்தாவிற்கு தன் நண்பர்கள் உதவியுடன் தான் நடத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் மூலம் ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவிபுரிந்து உறுதுணையாக இருக்கும் பழக்கமும் உண்டு! இந்நிலையில் சமந்தாவின் தொண்டு நிறுவனத்திற்கு உதவி புரியும் சாக்கில் சமந்தாவை அடைய திட்டம் தீட்டுகிறார் பெரும் கோடீஸ்வரரும், தொழில்அதிபருமான வில்லன் சுதீப்! அப்புறம்? அப்புறமென்ன...? வில்லன் சுதீப்பின் திட்டத்திற்கு தடையாக திரியும், தெரியும் நாயகர் நானியை தன் ஆட்கள் மூலம் கடத்தி வந்து காலாலேயே மிதித்து கொள்கிறார் சுதீப். அதன்பிறகு "ஈ"-யாக மறுபிறவி எடுக்கும் நானி, வில்லன் சுதீப்பை சமந்தா உதவியுடன் போட்டு தள்ளுவது தான் "நான் ஈ" படத்தின் கரு, கதை, களம், எக்ஸ்ட்ரா, எக்ஸ்ட்ரா... எல்லாம்!

கரண்ட் கட் ஆன தன் காதலி சமந்தா வீட்டுக்கு மொட்டை மாடி டிஷ்-ஆண்டனாவில் சில்வர் பேப்பர்களை பரப்பி அதில் டார்ச் அடித்து அதன் மூலம் ‌ஒளி வெள்ளத்தை பாய்ச்சுவதில் ஆரம்பிக்கும் நானியின் ஹீரோயிசம், படத்தில் நானி இறந்து ஈ ஆன பின்பும் செய்யும் சாகசங்களை நம்ப வைக்க சரியான காரணியாகிவிடுகிறது. இது மாதிரி விஷயங்க‌ள் தான் ஹீரோ இறந்து "ஈ" யாகிவிட்டார் "ச்சீ" என்று எண்ணத்தூண்டாமல் நம்மை ஒரு "ஈ"-யை ஹீரோவாக ரசிக்க வைக்கிறது என்றால் மிகையல்ல!

சமந்தாவை உள்நோக்கத்துடன் சுதீப் நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்து வந்து விருந்து கொடுப்பது, அந்த விருந்தில் சமந்தாவின் கவனம் முழுவதும் அங்கு யதேச்சையாக வரும் நானியின் மீதே இருப்பது, அதனால் வில்லன் விஸ்வரூபம் எடுப்பது, நாயகர் நானியை கொல்வது, நானி "ஈ"-யாக மறுபிறவி எடுத்து வில்லன் சுதீப்பை தூங்க விடாமல் சித்ரவதை செய்வது, சுதீப்பின் காரை கவிழ்த்துவிட்டு உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என எச்சரிக்கை வாசகம் எழுதுவது, ஈ, எறும்பு கூட நுழைய முடியாத அளவிற்கு வில்லன் சுதீப் தன் வீட்டை பாதுகாப்பு செய்து பலப்படுத்துவது, சமந்தா உதவியுடன் "ஈ" அந்த பாதுகாப்பையும் மீறி சுதீப் வீட்டிற்குள் போய் அவருக்கு தொடர் தொந்தரவு தருவது என படத்தை பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி. லாஜிக் பார்க்க வேண்டிய கதைகளி‌லேயே லாஜிக் இல்லாமல் காட்சிகளை பதிவு செய்யும் நம்மூர் முன்னணி, பின்னணி, நடுஅணி(?) இயக்குநர்களுக்கு மத்தியில் புனர் ஜென்மம், மறுபிறவி, ஈ - ரிவெஞ்ச்... என்று லாஜிக் இல்லாத கதையில், சீன் பை சீன் லாஜிக் மீறாமல் படத்தின் காட்சிகளை லாஜிக், மேஜிக்காக இயக்கி இருக்கும் இயக்குநர் ராஜ ‌மெளலி இஸ் கிரேட்! கங்கிராட்ஸ்!! கீப் இட் அப்...!!!

தமிழ்-தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பிரம்மாண்டமான அறிவியல் திகில் படமாக நான் ஈ-யை உருவாக்கியிருக்கும் இயக்குநர் எதிர்பார்த்ததை அப்படியே தந்திருக்கின்றனர் நாயகர் நானி, நாயகி சமந்தா, வில்லன் சுதீப், தேவதர்ஷினி மற்றும் சந்தானம் உள்ளிட்ட சகலரும். அதிலும் சுதீப், ரகுவரன், பிரகாஷ்ராஜ், கிஷோர் உள்ளிட்ட அத்தனை வித்தியாசமான வில்லன்களையும் கலந்து செய்த கலவையாக படம் முழுக்க கலக்கி இருக்கிறார்.

மரகதமணியின் பின்னணி இசை, கே.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் ஸ்பெஷல் எபெக்ட்ஸ், கிராபிக்ஸ், மிரட்டல்களும் கலந்துகட்டி படத்தை பிரமாண்டபடுத்தியிருக்கின்றன. அதிலும் நானியின் உடலில் இருந்து ஈ முட்டைக்குள் அவரது ஆன்மா அடைக்கலமாகி, மீண்டும் உயிர் பெற்று வரும் காட்சிகள் ஹாலிவுட்டுக்கே சவால் விடும் கலக்கல் காட்சிகள்!

ஆக மொத்தத்தில் "நான் ஈ", இந்த "ஈ"-யை மற்ற தமிழ் சினிமாக்கள் பலவற்றைமாதிரி ஓட்ட வேண்டியதில்லை, வெற்றிகரமாக ஓடிவிடும்! ஹீ...ஹீ "ஹிட்" ஈ!!

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!