சகுனி - கல்கி திரை விமர்சனம்


avatar

சகுனி - கல்கி திரை விமர்சனம் Vm_11410
கார்த்தி படமென்றாலே கலகலப்பு கேரண்டி! சகுனி ஆரம்பத்தில் இருந்து கடைசியில் வணக்கம் போடும்வரை கிண்டல், நையாண்டி, நக்கல் என்று அசத்துகிறார் கார்த்தி. ஒன் லைன் காமெடியன் சந்தானம், படத்தில் பிரேக் விழும் போதெல்லாம் ஆஜராகி, மஜா கிளப்புகிறார். ஹீரோவுக்கு இணையாக சந்தானம் வருவதும், பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு தத்துவங்கள் உதிர்ப்பதும் கொஞ்சம் கொஞ்சமாக போர் அடிக்கிறது. கொஞ்சம் ரூட்டை மாத்துங்க சந்தானம்!

சொந்த ஊரில் இருக்கும் பெரிய பங்களாவைக் காப்பாற்ற சென்னை வரும் கார்த்தி, எப்படி அதை அரசியல் தகிடு தத்தங்கள் செய்து சாதிக்கிறார் என்பதுதான் கதை. ரயில்வே துறை பாலம் கட்ட பங்களாவை எடுத்துக் கொள்ளப் போகிறது என்றால், அதை தடுக்க கோர்ட்டுக்குப் போகலாம். எதற்கு மாநில அரசின் மந்திரி, முதல்வர் வீடுகளில் தவம் கிடக்கவேண்டுமோ? படம் பார்க்க வருபவர்கள் ச்சும்மா சிரித்துவிட்டுப் போக்தானே வந்திருக்கிறார்கள், அவர்களுக்கு எதற்கு லாஜிக் புடலங்காய் எல்லாம் என்று இயக்குனர் நினைத்திருப்பார் போல! ரொம்ப பிரகாசமான எதிர்காலம் இருக்கு டைரக்டர் சார்!

இவ்வளவு எளிமையாக ஒரு கவுன்சிலர், ஒரு மேயர், ஒரு முதல்வர் ஜெயித்துவிட முடியும் என்று சினிமாவில் பார்க்கும்போது, நமக்கே பதவி ஆசை பிடித்துக் கொள்கிறது. ஏதோ அம்புலிமாமா கதை படிப்பது போல், ஒரே ஃபேண்டசி.

இதில் ரொம்ப மெனக்கெட்டு இருப்பது பிரகாஷ்ராஜ்தான். இவ்வளவு கூத்துகள் நடுவே அவருடைய வீராவேசமும் கொதிப்பும் ரியலிஸ்டிக் காமெடி! கடைசியில் ஜெயிலுக்குப் போகப் போகிறார். எதற்கு இப்படி வீணாக உடம்பை வருத்திக் கொள்கிறாரோ என்று பாவமாக இருக்கிறது. நாசர்தான் கூல் மாஸ்டர்! லோக்கல் சாமியாராக வந்து பின்னர் அகில உலக ரேஞ்சுக்கு உயர்கிறார். எளிமையான நடிப்பில், கலக்குகிறார். ராதிகாவுக்கு அதிக வாய்ப்பில்லை. ரோஜாவும் ஏன் வருகிறார் என்றே புரியவில்லை.

ஹீரோயின் ப்ரணித்தா, கேன்வாஸ் ஓவியம், பாடல்களுக்குச் சமத்தாக ஆடிவிட்டு, இறுதிக் காட்சியில் கார்த்தி தோளில் சாய்ந்து காதல் வசனம் பேசுவதோடு, சேப்டர் ஓவர். பாடல்களும் கேமராவும் நடனமும் கச்சிதம். ஜி.வி.பிரகாஷ், ஹிட்டான பாடல்களில் இருந்து உருவி உருவியே இசை கோர்த்திருப்பார் போல. தியேட்டரை விட்டு வெளியே வந்தவுடன் மறந்துவிடும் அதிசயத்தை என்னவென்று சொல்வது!

சத்யராஜ் நடித்த அரசியல் + காமெடி படங்களை மனத்தில் வைத்து, டைரக்டர் சகுனியைச் செதுக்கியிருக்கிறார். நேர்த்தியாக உருவாக இன்னும் நிறைய மெனக்கெட்டு இருக்க வேண்டும்.

ஒரே திருப்தி, கார்த்தி மட்டும்தான். மொத்த படத்தையும் தம்முடைய தோள்களில் தூக்கிக்கொண்டு ஓடுகிறார். அவருடைய துள்ளல் சிரிப்பும், ஃப்ரெஷ் முகமும், நடனமும், பாடிலேங்குவேஜும் ரசிகர்களைக் கட்டிப்போடுவது உறுதி. டைலாக் டெலிவரி எல்லாப் படங்களிலும் ஒரே மாதிரி இருப்பதை கொஞ்சம் மாற்றிக்கொள்ளலாம். தொடர்ந்து வலுவற்ற கதைகளையே தோளில் சுமந்து ஓடினால் கார்த்திக்கு முதுகு வலிக்கிறதோ இல்லையோ, ரசிகர்களுக்கு வலிக்கும்.

சகுனி - பைசா வசூல்!

துளசி

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!