சகுனி - தினமலர் விமர்சனம்


avatar

சகுனி - தினமலர் விமர்சனம் Vm_11410
ரயில்வே சுரங்கபாதைக்காக அநியாயமாக அரசாங்கத்தால் அபகரிக்கப்படும் தனது பூர்வீக வீட்டை மீட்பதற்காக சென்னை வரும் காரைக்குடி இளைஞன், அந்த அரசாங்கத்தை, ஆளும் கட்சியையே ஆட்டி வைத்து எதிர் கட்சியாக்கும் சர்வ வல்லமை பொருந்தியவனாக மாறுவதுதான்... "சகுனி" படத்தின் மொத்த கதையும்!

காரைக்குடியில் அரண்மனை போன்ற பூர்வீக வீட்டில் அடுப்பெரியாத நேரமே இல்லை... எனும் அளவிற்கு சதா சர்வகாலமும் அன்னதானம் போட்டே அழிவு நிலைக்கு வந்துவிட்ட குடும்பம் ஹீரோ கார்த்தியினுடையது! மிச்சமிருக்கும் அரண்மனை மாதிரியான பெரிய வீட்டையும், அரசாங்கம் ரயில்வே சுரங்கபாதை அமைக்க வேண்டும்... என அநியாயமாக அபகரிக்க பார்க்க, அதை காக்க தன் தாத்தாவின் அட்வைஸ்படி தனியொரு ஆளாக சென்னை வரும் கார்த்தி, அடாவடி முதல்வர் பிரகாஷ்ராஜூக்கு எதிராக தன் ஆட்டோ நண்பர் சந்தானத்துடன் சேர்ந்து கொண்டும், பிரகாஷ்ராஜின் அரசியல் எதிரி கோட்டா சீனிவாஸராவுடன் சேர்ந்து கொண்டும் செய்யும் சகுனி ஆட்டங்களும், அரசியல் மாற்றங்களும் தான் "சகுனி" படத்தின் லாஜிக் பார்க்க முடியாத மேஜிக்கான கதை, களம் எல்லாம்! இந்த சகுனி ஆட்டத்தோடு அத்தை மகள் பிரனீதாவுடனான காதல் சதுராட்டம், சந்தானத்துடனான காமெடி ஆட்டம் இத்யாதி, இத்யாதிகளை எல்லாம் கலந்துகட்டி கமர்ஷியல் கலர்புல்லாக சகுனியை திரைக்கு எடுத்து வர முயற்சித்து, அதில் பாதி வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குநர் சங்கர் தயாள்.என். ஆனால் மீதி தோல்விதான் சகுனி படத்தின் பின்பாதி என்பது ஏமாற்றம்!

கார்த்தி, லவ், ஆக்ஷ்ன், சென்டிமெண்ட், பாலிட்டிக்ஸ் என சகலத்திலும் சரி விகிதத்தில் புகுந்து புறப்பட்டு தன் ரசிகர்களை திருப்தி படுத்தியிருக்கிறார் பலே, பலே!

கதாநாயகி ப்ரனீதாவும் முந்தைய படங்களை காட்டிலும் பிரமாதம் என்றாலும் இரண்டு பாடல்கள், ஒன்றிரண்டு சீன்களே வருவதால் மனதில் ஒட்ட மறுக்கிறார். இதனால் ப்ரனீதா மட்டுமல்ல கார்த்தி - ப்ரனீதா காதலும் கூட எக்ஸ்ட்ரா பிட்டிங்காக எக்கி, தொக்கி நிற்பது படத்தின் பெரிய பலவீனம்!

சந்தானம் ரஜினியாகவும், கார்த்தி கமலாகவும் பண்ணும் அலப்பறைகள்... முன்பாதி படத்தை போவதே தெரியாமல் போக வைத்திருக்கிறது. அதே "பெப்", பின்பாதியில் இல்லாமல் ஒரே பில்-டப்பாக இருப்பது மைனஸ்!

முதல் அமைச்சர் பதவிக்காக முறைபடி முதல்வராக வேண்டியவரை தீர்த்து கட்டுவதில் தொடங்கி, தன் ஆசை நாயகி கிரணையும் போட்டு தள்ள முயல்வது வரை பிரகாஷ்ராஜின் சாணக்யதனம், சில இடங்களில் சகுனி கார்த்தியையும் பீட் செய்து விடுகிறது பேஷ், பேஷ்!!

கார்த்தி, பிரனீதா, எதிர்கட்சி தலைவர் கோட்ட சீனிவாஸராவ், இட்லிசுட்டு வட்டிக்கு விட்டு, சகுனி கார்த்தி தயவால் சென்னை மேயராகும் ராதிகா, ப்ரனீதாவின் அம்மாவும், கார்த்தியின் காரியக்கார அத்தையுமான ரோஜா, பிரகாஷின் ஆசை நாயகி கிரண், பிரகாஷின் கைத்தடி மற்றும் கார்த்தியின் விசுவாசி சித்ராலட்சுமணன், தாத்தா வி.எஸ்.ராகவன் என்று எக்கச்சக்க நட்சத்திர பட்டாளம்! ஒவ்வொருவரும் தங்கள் பங்கிற்கு பளிச் என்று மின்னியிருக்கின்றனர்!

அதேமாதிரி ஜி.வி.பிரகாஷின் இசை, பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு என ஏகப்பட்ட ப்ளஸ் பாயிண்டுகள் இருந்தும் ஏனோ தெரியவில்லை, இயக்குநர் சங்கர் தயாள்.என்.னின் எழுத்து-இயக்கத்தில் "சகுனி" முன்பாதி அளவிற்கு பின்பாதி சரியாக இல்லை!

மொத்தத்தில் சரியாநி...? சாரி! "சகுனி!!

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!