கலகலப்பு - தினமலர் விமர்சனம்


avatar

கலகலப்பு - தினமலர் விமர்சனம் Vm_15111
கதாநாயகி குஷ்புவே மாஜி கதாநாயகி ஆன பின்பு, அவரை காதலித்து கரம்பிடித்த சுந்தர்.சி, இனியும் கதாநாயகராக காலம் தள்ள முடியாது எனும் நிலையில் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் படம்தான் "கலகலப்பு". சுந்தர்.சி படம் என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது! இந்தப்படத்திற்கு டைட்டிலேயே கலகலப்பு என வைத்தவர் காமெடிக்கு பஞ்சம் வைப்பாரா என்ன...? படம் மொத்தமும் சிரிப்பும், களிப்புமாய் கலக்குதப்பு! என சொல்ல வைக்கும் விதத்தில் இருக்கிறது! பேஷ், பேஷ்!!

கதைப்படி பரம்பரை பரம்பரையாக தங்கள் வசம் இருந்து வரும் ஹோட்டலை இந்தகாலத்திலும் காப்பாற்றி கரை சேர்க்க போராடும் அண்ணன் - தம்பிகள் "களவாணி" விமலும், "தமிழ்படம்" சிவாவும்! அண்ணன் விமலுக்கு சுகாதார அதிகாரி அஞ்சலியுடன் காதல். தம்பி சிவாவுக்கு, விமல் படிக்க வைத்து காப்பாற்றி வரும் ஓவியா மீது காதல்! அஞ்சலி மீதான காதலால் விமல் ஒரு கட்டத்தில் ஹோட்டலை விட்டு தூர தேசம் செல்ல வேண்டிய சூழல்! அந்த சூழலில் ஹோட்டலை அபகரிக்க நினைக்கும் நயவஞ்சகர்களிடம் சிவா, ஹோட்டலை வைத்து சூதாடுகிறார்! தோற்றுபோகிறார்! அஞ்சலியின் தாய்மாமன் சந்தானத்திடமிருந்து அஞ்சலியையும், தம்பியை ஏமாற்றி சூதாட்டத்தில் ஹோட்டலை அபகரித்தவர்களிடமிருந்து ஹோட்டலையும் விமல் எவ்வாறு மீட்கிறார்? சிவா அதற்கு எப்படி துணை நிற்கிறார்? என்பது தான் கலகலப்பு படத்தின் மொத்த கதையும். இந்த கதையை எத்தனைக்கு எத்தனை காமெடியாகவும், கலர்புல்லாகவும் சொல்ல முடியுமோ அத்தனைக்கு அத்தனை கலக்கலாக, கம்ர்ஷியலாக சொல்லி இருக்கும் சுந்தர்.சிக்கு சொல்லியே ஆக வேண்டும் ஒரு பெரிய ஹேட்ஸ் ஆப்!

ஹோட்டலை டெவெலப் பண்ணுகிறேன் பேர்வழி, என அங்கே இங்கே வட்டிக்கு வாங்கி, ஒவ்வொரு முறையும் பெரிய நஷ்டமாகி கடன்காரர்க‌ளை கண்டு ஓடி ஓளியும் அப்பாவி பாத்திரத்தில் விமல் வெளுத்து வாங்கியிருக்கிறார். சுகாதார அதிகாரி அஞ்சலிதான் என தெரியாமல் அவரிடம் எக்குதப்பாய் மாட்டிக் கொண்டு பின் எஸ்கேப் ஆகும் இடங்களில் விமல் பிரமாதம்!

சிவா திருடனாக ஜெயிலுக்கு போனதை மறைக்க துபாய்க்கு போய் திரும்பியதாக ஓவியாவுக்கு ரூட் விடுவதும், உண்மை தெரிந்ததும் அசடு வழிவதுமாக அலட்டி கொள்ளாத நடிப்பில் ஆங்காங்கே விமலையே தூக்கி சாப்பிட்டு விடுகிறார். சிவா, அண்ணன் காதலி அஞ்சலிக்காக ஹேண்ட்பேக்கும், தன் காதலி ஓவியாவிற்காக பலவிதமான பொருட்களையும் ஒரு ஷாப்பிங் காம்பளக்ஸீக்குள் மாறுவேடத்தில் புகுந்து திருடி கொண்டு வரும் இடங்களில் தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது.

அஞ்சலி, ஓவியா என இரண்டு கதாநாயகிகள் இருவருமே தங்கள் பங்கை சரியாக செய்திருக்கின்றனர். நடிப்பில் மட்டுமல்ல, கவர்ச்சி விருந்து படைப்பதிலும் இருவரும் போட்டிபோட்டு கலகலப்பை கவர்ச்சியாய் ஆக்கியிருப்பது படத்தின் பெரும்பலம்!

அஞ்சலியின் முறைமாப்பிள்ளை வெட்டுப்புலியாக வரும் சந்தானம், கிட்டத்தட்ட படத்தின் மூன்று நாயகர்களில் ஒருவர் எனும் அளவிற்கு காமெடி ப்ளஸ் காமநெடியில் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

பஞ்சு சுப்பு பத்துகோடி வைரத்தை செல்போனில் மறைத்து வைத்து தெரிந்தவரிடம் கொடுத்து வைத்து இன்சூரன்ஸ் பெற முயற்சிப்பது, அந்த வைரங்கள் விபச்சார அழகிகள், புரோக்கர், போலீஸ், ரவுடி என கைமாறி விமல் - சிவா கைகளில் சிக்குவது, அதை திரும்பபெற விமலின் நண்பர் கம் வில்லன் போலீஸ் ஜான் விஜய்யும் பஞ்சு சுப்புவும் பண்ணும் காமெடி கலாட்டக்கள், அஞ்சுவட்டி அழகேசனாக வரும் இளவரசு, காமெடி போலீஸ் ஜார்ஜ் உள்ளிட்ட எல்லோரும் தங்கள் பங்கிற்கு ரசிகர்களே தரையில் விழுந்து, எழுந்து, தவழ்ந்து சிரிக்க வைக்கிறார்கள்.

அங்கொன்றும், இங்கொன்றுமாய் ஒரு சில குறைகள் இருந்தாலும் யு.கே.செந்தில்குமாரின் இயற்கை எழில் கொஞ்சும் ஒளிப்பதிவும், விஜய் எபினேசரின் இதமான இசை, சுந்தர்.சியின் காமெடி கலாட்டாவான எழுத்து - இயக்கம் உள்ளிட்டவைகள் கலகலப்பு படத்தை லாஜிக் பார்க்காமல் ரசிக்க வரும் ரசிகர்களுக்கு ‌காமெடி மேஜிக் எனலாம்.

மொத்தத்தில் கலகலப்பு - கலக்குதப்பு!

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!