வழக்கு எண் 18/9 - குமுதம் சினிமா விமர்சனம்


avatar

 வழக்கு எண் 18/9 - குமுதம் சினிமா விமர்சனம் Vm_16010
விடலைப் பருவத்தினரை உசுப்பேற்றி கல்லா கட்டிக்கொள்ளும் படங்களுக்கு மத்தியில், பெரியவர்கள் கவனிக்க மறந்த இளசுகளின் பிரச்னைகளை முதன்முதலாக உருப்படியாகப் பேச வந்துள்ளது “வழக்கு எண் 18/9’.

வளர்ப்பும் சூழ்நிலையும் கற்றுக்கொடுத்த வக்கிரத்தால் ஒரு பள்ளி மாணவன் செய்யும் ஒரு குற்றத்தை மையமாக வைத்து, இன்றைய விடலைப் பருவத்தினரின் வாழ்க்கையை உள்ளபடி பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி சக்திவேல்.

ஓரளவுக்காவது பெயர் தெரிந்த ஒரு முகத்தைக்கூட படத்தில் பார்க்க முடியவில்லை. ஆனால் அனைவரும் அசத்தியிருக்கிறார்கள். ஹீரோ ஸ்ரீ இனி சொந்தமாக கையேந்திபவன் நடத்தலாம். அந்தளவுக்கு சாலையோர சாப்பாட்டுக் கடையில் வேலைபார்க்கும் கேரக்டருக்காக உழைத்திருக்கிறார். காதலிக்கான வழக்கில் காதலிக்காகவே குற்றவாளி ஆவதற்கு போலீஸிடம் ஸ்ரீ ஒத்துக்கொள்வது பார்ப்பவர்களின் மனசில் பாறாங்கல்லைக் கட்டி விடுகிற காட்சி. வேலைக்காரப் பெண்ணுக்கே உரிய அவசரமும் மிரட்சியுமாக நடமாடும் ஊர்மிளா மகந்தா ஒரிசா பெண்ணாம். அடக்கி வாசித்தே வெளுத்து வாங்கியிருக்கிறார். க்ளைமாக்ஸில் இவர் எடுக்கும் முடிவுக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது.

தவறான பாதையில் கால் பதித்துவிடும் பள்ளி மாணவி மணீஷா, பால் வடியும் முகத்துடன் வில்லத்தனம் செய்யும் மிதுன் முரளி போன்ற சின்னஞ்சிறுசுகளின் இயல்பான நடிப்பு ஆச்சரியம். இரவு நேர நடைபாதையில் நண்பனுக்காக கூத்துக் கலைஞன் சின்னசாமி போடும் அதிரடி ஆட்டம் மண்ணின் கலைகளை மறந்துவிட்ட நம்மை செவுளில் அடிக்கிறது. கடை முதலாளியிடம் பையன்கள் செய்யும் குறும்புகள் காமெடியில் புது ரகம்.

இன்ஸ்பெக்டராக நடித்துள்ள அந்த மீசைக்காரர் யாரோ? நெஞ்சைப் பதற வைக்கிற வழக்கில்கூட உருட்டி மிரட்டி பணம் பார்த்துவிடுகிற காவல்துறையின் கடுப்பு ஆடுகளை இவர் பிரதிபலிக்கும் காட்சிகள்தான் படத்தின் ஹைலைட்.

ஸ்ரீயின் கதைக்கும், மணீஷாவின் கதைக்கும் அங்கங்கே அழகாக முடிச்சுப் போடும் எடிட்டிங் உத்தி அருமை. 5டி கேமராவிலேயே தரமான படத்தைக் கொடுக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். அறிமுக இசையமைப்பாளர் பிரசன்னாவின் பின்னணி இசை ஏமாற்றவில்லை. மையக்கதைக்கு ஓரமாக கந்துவட்டி, வட நாட்டு முறுக்கு கம்பெனி, கல்வித்துறையின் கசடுகள், அதற்குத் துணை போகும் அரசியல் என சமூக அவலங்களை பிரசார வாசனையே இல்லாமல் விளாசுவதோடு, இடையே மயிலிறகாய் ஒரு காதல் கதையையும் சொருகியிருப்பது பிரமிக்க வைக்கிற ஸ்கிரிப்ட் உழைப்பு.

க்ளைமாக்ஸை நியாயப்படுத்த, ஊர்மிளாவின் அப்பா சமூக அக்கறை மிக்கவராக முதலிலேயே காட்டப்படுகிறது. ஆனால் அது ஊர்மிளாவைப் பற்றி ஒன்றுமே தெரியாத ஸ்ரீ மூலம்தான் காட்டப்பட வேண்டுமா?

உண்மைச் செய்தியின் யதார்த்தம் கெடாமல் கற்பனையைக் கலந்து, கண்ணியமாக ஒரு கதையை நிறுவுவதில் பாலாஜி சக்திவேலுக்கு அபார வெற்றி கிடைத்திருக்கிறது.

வழக்கு எண் 18/9 - குறிஞ்சிப்பூ.

குமுதம் ரேட்டிங் - சூப்பர்

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!