"கீ...தன்!.... என்னைத் தப்பா நினைச்சீங்கன்னா.... அறுத்துகிட்டு செத்துப் போயிடுவேன்!!" என்று தன் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு சொன்னதும், நாங்கள் அனைவரும் கொஞ்சம் தடுமாறிப் போனோம்...
சுவற்றில் மோதிக் கொண்டு அழுததால், அவள் நெற்றியிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.!
"ஐயோ லதீபா! ரத்தம் வருதும்மா...!" என்று அவளுடைய அப்பா அவளை நெருங்கினார்...
"கிட்ட வராதீங்க! யாராவது கிட்ட வந்தீங்கன்னா, கண்டிப்பா அறுத்துக்குவேன்!"
"என்ன லதீபா இப்படியெல்லாம் பண்ணுரே, வேண்டாம்மா. கத்தியைக் கீழே போடு!" என்று என் அம்மாவும் அருகில் நெருங்கினார்...
"அத்தை... வேண்டாம்! வராதீங்க!..." மிகவும் ஆக்ரோஷமாக கூறினாள் லதீபா.
ஆனால், நான் அப்போது கொஞ்சம் கொடூரமானவனாகவே நடந்து கொண்டேன்...
ஆம், அவளுக்கு திருமணம் நடந்ததை என்னிடம் மறைத்து விட்டாளே என்று எனக்கு அவள் மீது ஆத்திரம் இருந்தது!
"கீதன்... என்ன கேட்டீங்க?!....."
நான் அவளைப் பார்க்காமல் திரும்பிக் கொண்டேன்.
"என்னைப் பாருங்க கீதன்! என்னைப் பார்த்துக் கேளுங்க கீதன்!"
"..................................."
"இப்பப் பார்க்கப் போறீங்களா இல்லையா?..."
நான் பல்லைக் கடித்துக் கொண்டு நின்றேன்.
கொஞ்ச நேரத்தில்...
"ஐயோ லதீபா!..." என்று என் அம்மா கூச்சல் போட்டார். கூடவே லதீபாவுடைய அப்பாவின் கூச்சலும் கேட்டது...
நான் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தேன்...
லதீபா கீழே விழுந்து கிடந்தாள்!
என்னையும் அறியாமல் ஓடிச் சென்று அவளைத் தூக்கினேன்.
"பாவம், சின்னப் பொண்ணுல்ல... தலையில அடிச்சிக் கிட்டு அழுததுல மயக்கம் போட்டு விழுந்துட்டா!" என்று என் அம்மா சொன்னதும் தான் எனக்கு உயிரே வந்தது...
""ஏம்மா... இப்படியெல்லாம் பண்ணுரே..." என்று அவளுடைய அப்பா அழுது புலம்பினார்.
முகத்தில் தண்ணீர் தெளித்து அவளைத் தட்டி எழுப்பிய போது, லேசாக அவளுடைய விழிகள் சுழன்றது...
"நீ ஏண்டா அந்தப் பொண்ணைப் பார்த்து அப்படிக் கேட்டே? பாவம் எப்படித் துடிச்சிப் போயிட்டா தெரியுமா? முட்டாப் பயலே!..." என் அம்மா என்னைத் திட்டினார்.
"லதீபா! ஏன் லதீபா இப்படிப் பண்ணினே?" என்றேன் நான்.
லதீபாவின் கண்கள் லேசாக அசைந்தது...
"ஏன் லதீபா என் கிட்ட மறைச்சிட்டே? உனக்கு கல்யாணம் ஆனது எனக்கு தெரிஞ்சா, நான் நான் உன்னை ஏத்துக்க மாட்டேன்னு நினைச்சிட்டியா? என்ன நடந்ததுன்னு என்கிட்ட நீ சொல்லியிருக்கலாமே லதீபா! நான் உன் மனசை மட்டும் தானடி காதலிச்சேன். சொல்லு லதீபா, என்ன நடந்துச்சு?" என்றேன் நான்.
"தம்பீ!.. நீங்க நினைக்கிற மாதரி.... லதீபாவுக்கு இன்னும் கல்யாணம் நடக்கல தம்பீ!" என்றார் லதீபாவின் அப்பா!
நான் அதிர்ச்சியோடு அவரைத் திரும்பிப் பார்த்தேன்...
"கொஞ்சம் இப்படி வாங்க..." என்றார்.
நான் அவரைப் பின் தொடர்ந்தேன்....
லதீபா இன்னும் மயக்கத்தில் இருந்து இன்னும் மீளவில்லை...
"ஆமா தம்பி, லதீபாவுக்கு இனிமே தான் கல்யாணம்! அது பிடிக்காம தான் உங்க கூட வந்திருக்கிறாள்..."
இதைக் கேட்டதும் என்னால் எதுவுமே பேச முடியவில்லை!
என் லதீபாவுக்கு, என்னோடு வாழ வேண்டும் என்பதில் தான் எவ்வளவு ஆசைகள்!...."முதல்ல என்னை மன்னிச்சிடுங்க தம்பி! இதெல்லாம் உங்களுக்கு தெரியும்னு நினைச்சி தான் நான் உங்க மேல ஆத்திரப் பட்டுட்டேன்.
".................................."
"சத்தியமா சொல்லுறேன் தம்பி, எனக்கு உங்கள் காதலைப் பிரிக்கணும்-னு எண்ணம் இல்லை, உங்களைப் பிடிக்காமலும் இல்லை ஆனா என்னோட சூல்நிலை....."
"..........................."
"அம்மா இல்லாம வளர்ந்தவ என் பொண்ணு. பாவம்! நான் அவளை சின்ன வயசில இருந்தே கஷ்டப் பட விட்டுட்டேன். எனக்காக அவள் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கா... ஆனா எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் யாறுக்கிட்டயும் 5 காசு சும்மா வாங்கமாட்டேன். என் பொண்ணுங்களையும் நான் அப்படித்தான் வளர்த்தேன். ஆனா என் வீதி! எனக்கு ஒரு பெரிய கடன் சுமையைத் தந்துடுச்சி!..."
ஆம்! நாங்கள் எங்களுடைய
முதல் சந்திப்பில் பரிமாறிக் கொண்ட அந்த கடன் பிரச்சினைதான் எங்கள் காதலுக்கு எதிரியாக அமைந்திருக்கிறது! என்று எனக்குப் புரியத்தொடங்கியது...
"நான் எனக்காக அந்தக் கடனை வாங்களை தம்பி. இன்னொருத்தனுக்கு வாங்கிக் கொடுத்தேன். ஆனா, அவன் கட்டாம தற்கொலைப் பண்ணிக்கிட்டான். அதனால இப்ப அந்தக் கடனை நான் கட்ட வேண்டியதாப் போச்சி. எப்படிடா அந்தக் கடனை அடைக்கப் போறோம்னு நான் புலம்பும் போதெல்லாம், என் பொண்ணுதான் எனக்கு ஆறுதல் சொல்லுவா. ஆறு வயசிலேயே "ஐஸ் குச்சி" வெட்டிக் கொடுத்து சம்பாதிச்சு தருவா! பள்ளிக் கூடம் போயிட்டு வந்தவுடனே எல்லாப் பிள்ளைங்களும் விளையாடப் போவாங்க, ஆனா இவ மட்டும், "வேப்பங் கொட்டையைப்" பொறுக்கி வந்து சேர்த்து வைப்பா!..." அவர் தனது கண்களைத் துடைத்துக் கொண்டார்...
"................................"
"ரொம்ப கஷ்டப் பட்டுட்டா தம்பி! இப்ப கூட, காலேஜ் விட்டதும் ஏதோ கடையில வேலைக்குப் போறேன்னு சொன்னா, நான் வேண்டாம்னு சொல்லியும் அவ கேக்கல... மாதா மாதம் கரைக்டா பணம் அனுப்பி வச்சிடுவா... இதுல அவளோட தங்கச்சியையும் படிக்க வச்சிக்கிட்டா!... எவ்வளவு பொறுப்பு தெரியுமா என் பொண்ணுக்கு?!" மீண்டும் அவரது கண்கள் கலங்கியது.... துடைத்துக் கொண்டார்!
அவளுடைய இந்தக் குணங்கள் தானே என்னையும் கட்டி போட்டது! என் லதீபா சிறப்பானவள் தான்! நான் அவளுக்காக புலம்புவதில் அர்த்தம் இருக்கிறது! அவளுக்காக என் வாழ்க்கையை அர்ப்பணிப்பதில் பெருமையடைகிறேன்!..
"எல்லா அப்பனுங்களும் தன்னோட பொண்ணுங்களுக்கு சொத்து சேர்த்து வைப்பாங்க. ஆனா நான், என் பொண்ணுங்களுக்கு கடனைத் தான் சேர்த்து வைச்சேன்! இப்ப சொல்லுங்க தம்பி, நான் என் பொண்ணுக்கு ஒரு நல்ல இடம் பார்த்தது தப்பா?"
"....................................."
"சின்ன வயசிலேருந்து கஷ்டப் பட விட்டுட்டோமே, இனிமேலாவது சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சது தப்பா?.."
".................................."
"என்னோட நண்பன் ஒருத்தன், 'உன்னோட கடனை எல்லாம் நானே கட்டிடுறேன்... உன் மகளை என் பையனுக்குத் தருவியான்னு' கேட்டான்! எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்திச்சி. உடனே ஒத்துக்கிட்டேன். வசதிக்காக இல்லை தம்பி! என் பொண்ணு சந்தோஷமா இருக்கணும் அப்படிங்கறதுக்காகத்தான்! அவ்வளவு பெரிய பணக்காரன் வரதட்சிணையே வேண்டாம்னு என் பொன்னைக் கேக்குரான்னா..? அதுக்கு என் குடும்பத்துமேல இருந்த மரியாதை தான் தம்பி காரணம்!"
"..................................."
"என் பொன்னாச்சே... என் பேச்சை மீற மாட்டாள்னு நினைச்சி... அவளுக்கு இரு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம்னு நினைச்சி... அவகிட்ட கேக்காமலேயே பேசி முடிச்சி பத்திரிக்கையும் அடிச்சிட்டேன் தம்பி!..."
"......................................"
"சத்தியமா சொல்றேன் தம்பி! என் பொண்ணு உங்களைக் காதலிக்கிறாங்கறது எனக்கு தெரிஞ்சிருந்தா... இதை நான் செஞ்சிருக்கவே மாட்டேன்! "எனக்கு என் பொண்ணு சந்தோஷமா இருக்கணும்! அவ இனிமேலயும் கஷ்டப் படாம வாழனும்!" அது யாருக்கூட இருந்தா என்ன? இப்படி தான் தம்பி நான் நினைப்பேன்."
"................................."
"ஆனா, இன்னும் ரெண்டு நாள்ல அவளுக்கு கல்யாணம்! அவங்க தட புடல எல்லா ஏற்பாடும் பண்ணிக்கிட்டு இருக்காங்க... இப்பப் போயி என் பொண்ணு ஓடிப் போயிட்டான்னு சொன்னா....? என்னைக் காறித் துப்ப மாட்டாங்க? உங்களை விட அவங்க வசதி கம்மிதான் தம்பி. அதனால நான் ஏதோ பணத்துக்காக என் பொன்னை கூட்டி விட்டுட்டேன்னு என் குடும்பத்தைப் பத்தித் தப்பாப் பேச மாட்டாங்க...."
"..................................."
புலம்பிக் கொண்டிருந்தவர் திடீரென்று என் கால்களைப் பிடித்துக் கொண்டு அழுதார்...
"தம்பி!... என் குடும்ப மானம் உங்க கையில தான் தம்பி இருக்கு! என் பொண்ணுக்கு இந்தக் கல்யாணம் நடக்கலைன்னா என் குடும்ப மானம் சிதைஞ்சி போயிடும் தம்பி!... நீங்க வேணும்னா என்னோட சின்னப் பொன்னைக் கல்யாணம் பன்னிக்கோங்க தம்பி! என் பொன்னை என்கிட்ட திருப்பிக் கொடுத்திடுங்க தம்பி!...."
"...................................."
"என் பொண்ணு, என்னை விட உங்க மேலதான் உசுரையே வச்சிருக்கா,... நீங்க சொன்னா கேப்பா தம்பி!... சொல்லிப் புரிய வைங்க தம்பி! விட்டுடுங்க தம்பி!... என் பொன்னை என்கூட அனுப்பி வச்சிடுங்க தம்பி! உங்களுக்குப் புண்ணியமாப் போயிடும் தம்பி! இல்லைன்னா நானும் என் சின்னப் பொண்ணும் தற்கொலை செஞ்சிக்கரதை விட விட வேற வழியே இல்லை தம்பி!..."
"............................"
"இங்க மாதரி எங்க ஊரு இல்லை தம்பி.... இங்கே சைதாபேட்டையில் இருந்து கோடம்பாக்கம் போயிட்டா நம்மளை யாரும் கண்டுக்க மாட்டாங்க. ஆனா, நாங்க இருக்குறது கிராமம் தம்பி! சாகுற வரைக்கும் சொல்லிக் காட்டிக் கிட்டே இருப்பானுங்க... அதை என்னால தாங்கிக்க முடியாது தம்பி!"
நான் எதுவுமே பேசாமல் இருப்பதைப் பார்த்ததும், அவர் என்னைப் பார்த்துக் கேட்டார்...
"என்ன தம்பி!.... எதுவுமே பேசாம இருக்குறீங்க?... ஓ! உங்களுக்கு காதல் தான் பெரிசு இல்லை! புரியுது தம்பி... உங்களால காதல்ங்கர எல்லையை விட்டு வரமுடியாது! ஆமா, என் பொண்ணே கழுத்துல கத்தியை வச்சிக்கிட்டாளே... நான் உங்களை குறை சொல்லி என்ன பிரயோஜனம்?"
"................................."
"பரவாயில்லை தம்பி! நான் போறேன்! இன்னும் ரெண்டு நாள் இருக்கு கல்யாணத்துக்கு! "அதுக்குள்ள என் பொண்ணு வந்தா, அந்தக் கல்யாணம் நடக்கும்! இல்லைன்னா...." அவர் இதைக் கொஞ்சம் அழுத்தமாகவே கூறினார்....
"........................."
"நான் கெளம்புறேன் தம்பி!" என்று கொஞ்ச தூரம் சென்றவர் திரும்பி வந்தார்...
"என் பொண்ணை சந்தோஷமா பாத்துக்கோங்க தம்பி! விளையாட்டுப் பொண்ணு!" என்று கூறிய போது அவர் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது...
".................................."
கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே, என் அம்மாவிடமும் சொல்லிவிட்டு, லதீபாவையும் பார்த்து, அவள் நெற்றியில் வருடிக் கொடுத்து விட்டு எழுந்து சென்றார்...
லதீபாவின் மயக்கம் தெளிந்திருந்தது. லதீபா அவரது கைகளைப் பிடித்துக் கும்பிட்டாள்... அவர் லதீபாவையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்து விட்டு... பதிலேதும் சொல்லாமல் அங்கிருந்து புறப்பட்டார்...
இப்போது, லதீபாவின் பார்வை என் மீது திரும்பியது!!