ஒரு கல் ஒரு கண்ணாடி - கல்கி சினி விமர்சனம்


avatar

ஒரு கல் ஒரு கண்ணாடி - கல்கி சினி விமர்சனம் Vm_18110
கிரிக்கெட் ஓப்பனிங் தொடங்கி லாஸ்ட் ஓவரின் கடைசி பந்து வரைக்கும் சச்சின் அல்லது சேவாக் அல்லது தோனி... இவர்களில் யாராவது ஒருவர் சிக்ஸர், ஃபோர்... என பௌண்ட்ரிக்குப் பந்தை விரட்டிவிரட்டி அடித்தக்கொண்டே இருந்தால், கிரௌண்டில் என்ன ஆரவாரம் இருக்குமோ அந்த ஆரவாரமும் கைத்தட்டலும் இருக்கின்றன “ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் ஒவ்வொரு சீனுக்கும், ஹாட்ரிக் வெற்றி இயக்குனர் ராஜேஷûக்கு; ஹீரோவாக முதல் வெற்றி உதயநிதிக்கு; வெற்றிமேல் வெற்றி சந்தானத்துக்கு.

கதை ஒன்றும் பெரிதாக இல்லை. கோடம்பாக்கக் குலவழக்கப்படி ஹன்சிகாவைப் பார்த்ததும் உதயநிதிக்குள் காதல் பத்திக்கிச்சு... பத்திக்கிச்சு. பத்திக்கிட்ட காதலை ஹன்சிகாவுக்குள்ளும் பத்தவைக்க உதயநிதியும், சந்தானமும் படும்பாடுதான் படத்தை இலக்கு நோக்கி இழுத்துச் செல்லும் திரைக்கதை. அதில் நான் சொல்வதெல்லாம் காமெடி; காமெடியைத் தவிர வேறொன்றுமில்லை என்று காமெடி சடுகுடு ஆடியிருக்கிறார் இயக்குனர் ராஜேஷ்.எம்.

அவன் பரவாயில்லடா... க்ளாஸ்லே சொல்றதைக் கேட்காட்டாலும் எக்ஸாம்ல எல்லா சப்ஜெக்ட்லையும் பாஸ்மார்க் வாங்கிடுறான் என்று வாத்தியார் வகுப்பில் ஒருவனையாவது பாராட்டுவார் இல்லையா... அப்படிப் பாராட்டலாம் உதயநிதியை. என்ன... டான்ஸ்தான் கொஞ்சம் தத்தக்கா... பித்தக்கா. காதலும் காமெடியும் உதயநிதிக்கு உறுத்தவில்லை.
ஹன்சிகா வெண்ணெய்ச் சிற்பம், சிரித்தாலும், அழுதாலும் ச்சும்மா புஸுபுஸுன்னு அழகு. இவரைச் “சின்ன குஷ்பு’ என்று சொன்னவன் வாய்க்குச் சர்க்கரைப் பரிசு.

சந்தானத்துக்குத் தொட்டதெல்லாம் சந்தனமாக மணக்கும் பொன்னான பருவம் இது. இனி இவர் பீக் ஹவர் மௌண்ட்ரோடு போல காமெடியில் பிஸியோ பிஸியென பிஸியானாலும் ஆச்சர்யமில்லை. உண்மையாகவே சந்தானத்தின் கௌன்டர் காமெடியை நம்பித்தான் காட்சிகளே நகர்கின்றன. அந்த ஃப்ளைட் கலாட்டா ரசிகனின் இதயத்தை ஹைஜாக் பண்ணிக் கொண்டு போய்விடுகிறது. க்ளைமாக்ஸில் ட்ரான்ஸ் லேஷன் காமெடிக்கு ஆடியன்ஸ் மத்தியில் அதிரடி அப்ளாஸ். சரண்யா பொன்வண்ணன், அழகம்பெருமாள்... அடிச்சாலும் புடிச்சாலும் அக்மார்க் தமிழ் ஜோடி.

ஹாரிஸின் இசையில், “வேண்டாம் மச்சான் வேண்டாம்’ பாடல் இளமைத் துள்ளல் எனில், “காதல் ஒரு பட்டர்ஃப்ளை’, “அகிலா அகிலா...’ பாடல்கள் சிலுசிலு அருவி. எடிட்டிங், கேமரா இரண்டும் அதனதன் எல்லையில் நின்று விளையாடுகின்றன.

இயக்குனர் ராஜேஷ்.எம். அவர்களே... உங்களின் அடுத்த படத்தின் க்ளைமாக்ஸில் ஆர்யா, ஜீவா... போன்றோர் கெஸ்ட் ரோலில் வந்து நாடகத்தனம் பண்ணாதிருக்க வேண்டும். இல்லையேல் உங்கள் படத்தில் ஹீரோ, ஹீரோயின், வில்லன் இவர்களுக்கு மத்தியில் என்னதான் டகால்டி நடந்து டங்குவார் அ(று)ந்தாலும், “கவலைப்படாத மச்சான் இவிங்க இப்படித்தான் எப்பப் பாத்தாலும் அடிச்சிக்குவாங்க...அணைச்சுக்குவாங்க... அப்புறம் க்ளைமாக்ஸ்ல ஒருத்தன் வந்து கதைக்கு சுபம் போடறேன்னு சூன்யம் வெச்சுட்டுப் போவான். எந்திருச்சி வா மச்சான்’ என்று புகை ஊதப் போயிடுவாங்க பொல்லாத தமிழ் ரசிகர்கள்.

ஒரு கல் ஒரு கண்ணாடி - டபுள் ஓ.கே.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!