ஒரு கல் ஒரு கண்ணாடி - குமுதம் சினிமா விமர்சனம்


avatar

ஒரு கல் ஒரு கண்ணாடி - குமுதம் சினிமா விமர்சனம் Vm_18110
சரவணன் (உதயநிதி) மீராவை (ஹன்சிகா) சிக்னலில் பார்த்தவுடன் காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார். மீரா ஓரளவுக்கு மேல் அவனை வெறுக்க முடியாமல், நண்பனாக ஏற்றுக்கொள்கிறாள். நட்பைக் காதலாக மாற்ற சரவணன் அடிக்கிற பல்டிகள்தான் “ஒரு கல் ஒரு கண்ணாடி’.

தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாகக் களமிறங்கியிருக்கிறார். சரக்கைச் சும்மா வாசனை பார்த்தே போதை ஏற்றிக்கொள்வது, அந்தப் போதையில் மொக்கையான ஆங்கிலத்தில் தனது காதலின் மகத்துவத்தைச் சொல்வது என இமேஜ் பார்க்காமல் உதயநிதி அடிக்கும் லூட்டிகள் ரசிக்க வைக்கின்றன.

ஒன்றுமே தெரியாத குழந்தை மாதிரி முகத்தை வைத்துக்கொள்ள வேண்டிய இடங்களில் மட்டும் உதயநிதியிடம் அநியாயத்துக்குத் திணறல்.

திமுதிமு ஹன்சிகா மோத்வானி, சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்களால் நடிப்பிலும் ஈர்க்கிறார்.

“மயிலாப்பூர் பார்த்தா’ என்கிற பார்த்தசாரதியாக சந்தானம் வெளுத்து வாங்கியிருக்கிறார். அம்பி கேரக்டருக்கு வெறுமனே “வந்துடுத்து போயிடுத்து’ பாஷையை நம்பாமல், வாய்ஸ் மாடுலேஷன், பாடி லாங்வேஜ் ஆகியவற்றில் தனிக் கவனமெடுத்து சந்தானம் செய்துள்ள குறும்புகள் பிரமிப்பூட்டுகிறது. இவரது ஜாங்கிரி காதலி ஜாடிக்கேற்ற மூடி.

அப்பாவி சரண்யாவும் அவரோடு வருஷக்கணக்காகப் பேசாமல் இருக்கும் அழகம்பெருமாளும் மனதைத் தொடுகிறார்கள். இடையே சினேகா, க்ளைமாக்ஸில் ஆர்யா, ஆண்ட்ரியா வந்து கலகலப்பூட்ட முயல்கிறார்கள்.

ஹாரீஸின் இசையில் “அகிலா என் செடி பூத்தது’, “வேணாம் மச்சான்’ பாடல்கள் தாளம் போட வைக்கின்றன.

காதலுக்கு ஹன்சிகா விதிக்கும் சராசரி நிபந்தனைகளுக்கு உதயநிதி ஓவர் ரியாக்ஷன் கொடுப்பது ஏனோ? ஒருவழியாக ஹன்சிகாவோடு சேர்ந்தபிறகு, “இந்தக் காதல் எனக்கு ப்ராஜக்ட் மாதிரிதான்’ என்று உதயநிதி வில்லத்தனமாக வார்த்தைகளை விடுவதை ஜாலி மேளாவில் சேர்த்துக்கொள்ள முடியவில்லை. நண்பனை ஹீரோ சிக்கலில் மாட்டிவிட்டால்தான் காமெடி படம் என்ற சம்பிரதாயத்துக்காகவே சந்தானம் உதயநிதியால் அவஸ்தைப்படுவது போல் தெரிகிறது.

இத்தனை ஓட்டைகளையும் மீறி முழுப்படத்தையும் வயிறு குலுங்க சிரித்துக்கொண்டே தான் ரசிகர்கள் பார்க்கிறார்கள். இயக்குநர் ராஜேஷின் அதிரடி டைமிங் சென்ஸ்தான் அதன் ரகசியம்.

ஒரு கல் ஒரு கண்ணாடி - காமெடி ராஜ்ஜியம்.

குமுதம் ரேட்டிங் - ஓ கே

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!