ஒரு கல் ஒரு கண்ணாடி - தினமலர் விமர்சனம்


avatar

ஒரு கல் ஒரு கண்ணாடி - தினமலர் விமர்சனம் Vm_18110
குறுகிய காலத்தில் மிகப்‌பெரிய பிரம்மாண்ட தயாரிப்பாளராக பெயரெடுத்த உதயநிதி ஸ்டாலின், கதாநாயகர் அவதாரம் எடுத்திருக்கும் அதிரடி திரைப்படம் தான் "ஒரு கல் ஒரு கண்ணாடி"! அதிரடி என்றதும் ஏதோ உதயநிதி முதல் படத்திலேயே ஐம்பது, அறுபது அடியாட்களை அடித்து துவம்சம் பண்ணி, நம்ப முடியாத வகையில் நம்மூர் நாயகர்(ஏற்கனவே இருக்கும்...) களையே மிஞ்சி விடுகிறாராக்கும் என நீங்கள் கருதினால், அதுதான் இல்லை! தனக்கு என்ன வரும் என்பதை உணர்ந்து உதயநிதி, சந்தானத்தை கூட்டு சேர்த்துக் கொண்டு காமெடியில் அதிரடி செய்து அசத்தியிருப்பது தான் ஹைலைட்!

கதைப்படி, உதயநிதி ஸ்டாலினும், சந்தானமும் குழந்தைப் பருவத்திலிருந்தே குறும்புக்கார நண்பர்கள். இருவரும் பெண்களின் சுடிதார் துப்பட்டா காற்றில் பறந்து வந்தால் கூட அதை துரத்திப்போகும் அளவிற்கு காதலி கிடைக்க காத்திருப்பவர்கள்... அவர்கள் இருவரின் எண்ணப்படியே இருவருக்கும் காதலிகள் கிடைக்க, நட்புதான் பெரிதென இவர், அவரது காதலுக்கும், அவர் இவரது காதலுக்கும் மாறி மாறி ஆப்புகள் வைக்க, நட்பு காதலை வென்றதா? காதல் நட்பை கொன்றதா.? இல்லை இரண்டும் ஒன்றை ஒன்று கட்டி காத்ததா...? என்பதுதான் க்ளைமாக்ஸ்!

இந்தக்கதையை எத்தனைக்கு எத்தனை காமெடியாகவும், கலர்ஃபுல்லாகவும் சொல்ல முடியுமோ அத்தனைக்கு அத்தனை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கியிருக்கும் இயக்குநர் ராஜேஷ்.எம்-மிற்கு ஒரு ஹேட்ஸ் ஆப் சொல்லியே தீர வேண்டும்! மனிதர் தனது முந்தைய வெற்றிப்படங்களான "சிவா மனசுல சக்தி", "பாஸ் என்கிற பாஸ்கரன்" படங்களைக் காட்டிலும் காமெடியில் புகுந்து விளையாடியிருப்பது பேஷ், பேஷ்... சொல்லுமளவிற்கு பிரமாதமாய் இருக்கிறது!

இயக்குநர் எதிர்பார்த்ததை எள் அளவும் பிசாகமல், பிரமாதமாக செய்து இருக்கிறார் ஹீரோ சரவணன் பாத்திரத்தில் வரும் உதயநிதி ஸ்டாலின்! சத்யம் சினிமாஸில் டிக்கெட் கிழித்து கொடுக்கும் கேரக்டரில் வெல்கம் டூ சத்யம் சினிமாஸ் என்றபடியே டிக்கெட் கிழித்து கொடுப்பதில் தொடங்கி, போலீஸ் உயரதிகாரி ஷியாஜி ஷிண்டேயின் மகள் ஹன்சிகாவை தைரியமாக டாவு அடிப்பது வரை சீன் பை சீன் காமெடியாகவும், கலர்புல்லாகவும் "யூத்"துகளை கவரும் வகையில் "நச்" என்று நடித்திருக்கும் உதயநிதிக்கு நடனம் வரவில்லை என்றாலும், அதையும் காட்டிக் கொள்ளாமல் பாடல் காட்சிகளிலும் பட்டையை கிளப்பி இருப்பது பலே, பலே சொல்ல வைத்து விடுகிறது! அப்பா ஸ்டாலினால் கலைத்துறையில் முடியாததை மகன் உதயநிதி நிச்சயம் நிறைவேற்றி காட்டுவார் என்பது நிதர்சனம்!

இரண்டாவது நாயகர், இரண்டு நாயகர்களில் ஒருவர்... எனும் அளவிற்கு சந்தானம் வாயை திறந்தாலே, அவ்வளவு ஏன் சந்தானம் வந்தாலே... தியேட்டரே சிரிப்பால் அதிர்கிறது! அவரும் சளைக்காமல், தத்துவமாகட்டும், காமெடியாகட்டும், காமநெடியாகட்டும் அத்தனையிலும் அடித்து தூள் பறத்தியிருப்பது ஓ.கே. ஓ.கே. படத்திற்கு டபுள் ஓ.கே. சொல்ல வைக்கிறது! ஒரு சீனில் மேஜை மீது ஒரு கிளாஸை வைத்து அதில் சரக்கை ஊற்றி, இது நீ, இதில் ஊற்றும் தண்ணீர் உன் காதலி, இந்த க்ளாஸ் தான் என்ன மாதிரி நண்பர்கள்... என அவர் அடிக்கும் தத்துவ டயலாக் ஆகட்டும், பேட், பேட், பேட் என்றபடி குதிக்கும் இடங்கள் ஆகட்டும் எல்லாமே சூப்பர்!

கதாநாயகி ஹன்சிகா, ஒரு சீனில் உதயநிதி சொல்வது மாதிரி ஒவ்வொரு சீனிலும் "சின்னத்தம்பி" குஷ்பு மாதிரியே அழகாக இருக்கிறார், வருகிறார், சிரிக்கிறார், போகிறார்! உதயநிதியின் அப்பா-அம்மாவாக வரும் அழகம்பெருமாள்-சரண்யா இருவருக்கும் இடையேயான 20 வருட ஊடல் ஒரு மாதிரி சென்டிமெண்ட் டச்!

ஹாரிஸ் ஜெயராஜின் இசை, பாலசுப்ரமணியெத்தின் ஒளிப்பதிவு எல்லாமே பாடல் காட்சிகளுக்கும், படக்காட்சிகளுக்கும் பெரிய பலம்!

ஆசிரியர் வேலை பார்க்கும் அழகம் பெருமாளை உதயநிதி, வாத்தி வாத்தி... என அடிக்கடி விளிப்பது, கோயில் குளத்து படித்துறையில் அமர்ந்தபடி சூரத் தேங்காய் சில்களை பொறுக்கி தின்று அவற்றை குளத்திற்குள் வீசுவது உள்ளிட்ட ஒரு சில குறைகள் இருந்தாலும், ஆர்யா, சினேகா, ஆன்ட்ரியா உள்ளிட்ட கெஸ்ட் ரோலில் வரும் நட்சத்திரங்களையும் கூட, பெஸ்ட் ரோலாக ரசிகர்கள் மனதில் நிற்க வைக்கும் அளவிற்கு காமெடி வித்தை தெரிந்த ரா‌ஜேஷ்.எம்-மின் எழுத்து-இயக்கத்தில், "ஓ.கே. ஓ.கே. - ஓ.கே. ஓ.கே அல்ல...!" "சூப்பரோ சூப்பர்!!"

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!