3 (Three) - குமுதம் சினி விமர்சனம்


avatar

3 (Three) - குமுதம் சினி விமர்சனம் VM_110539000000
ஒரு பணக்காரப் பையனும் ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பெண்ணும் பள்ளி நாட்களிலிருந்தே காதலிக்கிறார்கள். சில வருடங்களுக்குப் பிறகு பெற்றோரின் எதிர்ப்புடன் திருமணம் செய்துகொள்கிறார்கள். சுமூகமாக அவர்களின் வாழ்க்கை நகர்கிறது. திடீரென ஒரு நாள் அந்தப் பையன் கழுத்தறுபட்டு வீட்டில் இறந்து கிடக்கிறான். அவனுக்கு ஏன் இந்த முடிவு என்பதுதான் "3".

வீட்டுக்குச் செல்லப்பிள்ளை என்ற பலமுறை கைகொடுத்த கேரக்டர்தான் தனுஷூக்கு. “லைஃப் மேட்டர்ப்பா’ என்று தனுஷ் அடிக்கடி தன் தந்தையிடம் போய் நிற்கும் காட்சி முதலில் சிரிக்க வைக்கிறது. அப்புறம் அழவைக்கிறது. இரண்டிலும் தனுஷின் அக்மார்க் அசத்தல். “பைபோலார் டிஸ்ஸார்டர்’ என்கிற மனநலக் குறைபாட்டுக்கு ஆளானவராக வரும்போது, நேரெதிரான நடிப்பைக் காட்டி மிரட்டிவிடுகிறார்.

கோபம், தாபம், காதல், துயரம் என்று அத்தனை எக்ஸ்பிரஷன்களும் ஸ்ருதியிடமிருந்து அழகாக வந்துவிழுகின்றன. அழுகாச்சி மட்டும் ஓவர்டோஸ். தனுஷ், ஸ்ருதியின் நெருக்கமான ரொமான்ஸ் இளசுகளுக்கு கிக்கான கிஃப்ட்.

தனுஷின் நண்பன் சிவகார்த்திகேயன் சின்னச் சின்ன கேப்களில்கூட காமெடி சரவெடி கொளுத்திவிட்டு, திடீரென எஸ்கேப் ஆகிவிடுகிறார். தனுஷூக்கு இன்னொரு நண்பனாக வருகிற சுந்தர் கிட்டத்தட்ட செகண்ட் ஹீரோ. காணாமல் போன நாயின் முடிவு தெரிந்தபிறகும், ஸ்ருதிகாக தனுஷ் அதை சீரியஸாகத் தேட, சுந்தர் பதறும் காட்சி பகீர் ரகம்.

ஸ்ருதியின் வாய் பேச இயலாத தங்கையாக வருகிற அந்தச் சிறுமி யாரோ? ஸ்ருதியின் காதலில் குடும்பமே அதிர்ந்துபோய் நிற்க, திக்கித் திக்கிப் பேசி அனைவரையும் உருக வைத்துவிடும் காட்சிகள் பின்னி பெடலெடுத்திருக்கிறாள்.

தனுஷின் பக்கா ஜெண்டில்மேன் தந்தையாக வருகிற பிரபு, ஸ்ருதியின் அம்மாவாக வரும் ரோகிணி, கோபத்தை ஸ்பெக்ஸுக்குள் அடக்கி வைத்திருப்பது போலவே தெரிகிற ஸ்ருதியின் தந்தை போன்றோர் கவனம் ஈர்க்கிறார்கள். தனுஷின் அம்மாவான பானுப்ரியாவுக்கு நடிக்க வாய்ப்புக் கொடுக்காமல், எந்நேரமும் பூவும் பட்டுப் புடவையும் கொடுத்து திருப்தியடைந்து விட்டார்கள்.

அறிமுக இசையமைப்பாளர் அனிருத்தின் இசை, வேல்ராஜின் ஒளிப்பதிவு ஆகியவை 3ஐ தாங்கிப் பிடிக்கின்றன. இந்தியாவே எதிர்பார்த்த “கொலைவெறி?’ பாடல் தர்மசங்கடமான சூழலில் வந்து நிற்க, விசில் அடிக்கவா கேண்டீன் போகவா என்று ஆடியன்ஸுக்கு குழப்பம்.

பள்ளிப் பருவத்திலேயே காதலுக்கு அஸ்திவாரம் போடும் கதைகளை நம்மவர்கள் விடவே மாட்டார்களா? மிட்நைட் பார்ட்டியின் தள்ளுமுள்ளுக்கு நடுவே ஸ்ருதிக்கு தனுஷ் தாலி கட்டுவது, திருமணத்துக்குப் பிறகு இருவரும் கையில் மதுக் கோப்பைகளோடு ரொமான்ஸ் பண்ணுவது உள்ளிட்ட “புதுமை’கள் கதைக்குத் தேவைப்பட்டதாகத் தெரியவில்லை.

இரண்டாம் பாதியில் தனுஷ் காட்டும் சைக்கோ முகத்துக்கு முதல் பாதியிலேயே க்ளூ கொடுத்திருந்தால் ஸ்கிரிப்ட் இன்னும் ஈர்த்திருக்கும். பைபோலார் டிஸ்ஸார்டர் குறைபாடு குறித்த விழிப்புணர்வைக் காட்டிலும் பயமுறுத்தலே படத்தில் மிஞ்சி நிற்கிறது.

எடுத்த எடுப்பிலேயே ஹீரோ மரணம் என்ற அதிர்ச்சியோடு கதையைத் தொடங்கி, அதிலிருந்து துளியும் பின்வாங்காமல் தான் நினைத்ததைச் சொல்லியிருக்கும் அறிமுக இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷின் துணிச்சலைப் பாராட்டத்தான் வேண்டும்.

3 - முதல் இடத்துக்கு பக்கத்தில்

குமுதம் ரேட்டிங்: ஓகே

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!