தகுதி! (உருவகக் கதை)


ANTHAPPAARVAI

தகுதி!


அந்தக் காடு, மனிதர்களின் நடமாட்டம் இன்றி அமைதி பெற்றிருந்தது.

பல வகையான பறவைகள் அங்குமிங்கும் பறந்து கொண்டும், அதற்குரிய ஓசைகளை எழுப்பிக் கொண்டும் இருந்தன. அந்தக் காட்டின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த கோட்டான், எதையோ நினைத்து வேகமாகக் குரல் எழுப்பிக்கொண்டிருந்தது!

அந்தப் பக்கமாக வந்த ஒரு ஆந்தை, இந்தக் கோட்டானின் குரலைக் கேட்டு அதற்கு எதிரில் வந்து அமர்ந்தது; அதையே பார்த்துக் கொண்டிருந்தது.

“நம் குரலின் இனிமையைக் கேட்டுத்தான் இந்த ஆந்தை இங்கு வந்திருக்கிறது” என்று நினைத்த கோட்டான், மேலும் மேலும் வேகமாக காத்த ஆரம்பித்தது!

இந்த அலறலைக் கேட்ட ஆந்தை “இது என்ன வெறும் அலறல்?” என்று கேட்டது.
“என்ன அலறலா?” என் குரல் உனக்கு அப்படியாத் தோன்றுகிறது?” என்று கேட்டுவிட்டு வெறுப்புடன் ஆந்தையைப் பார்த்தது கோட்டான்.!

“அலறல் என்பது எனக்குத்தான் உரியதென்று இருந்தேன்! ஆனால், இப்போது நீயும் அலற ஆரம்பித்து விட்டதால்: அதை நான் வேறு விதமாகச் சொல்ல முடியவில்லை” என்று ஆந்தை பதிலளித்தது.

“நான் ஒன்றும் உன் குரலுக்கு முயற்சிக்க வில்லை! என் குரலிலேயே ஏற்றமுரத்தான் பயிற்சி செய்கிறேன். அந்த முயற்சியை நீ பாராட்டா விட்டால், உனக்கு “ரசனை”-யே தெரியாதென்றுதான் சொல்லவேண்டும்” – கோட்டான் இப்படிக் கூறிவிட்டு, மேலும் அதை ஆணவத்துடன் பார்த்தது!

“ஆமாம், ஆமாம், எனக்கு “ரசனை” தெரியாதுதான், “ரசனை” தெரிந்த நீ, என் குரலைப்பற்றி என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டு விட்டு ஆந்தை அலற ஆரம்பித்தது!

ஆந்தையின் அலறலைக் கேட்ட கோட்டான், “பரவா இல்லையே! இந்த அளவுக்கு உன் தகுதி உயர்ந்திருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை!” என்று பாராட்டுக் குரல் எழுப்பியது கோட்டான்!

கோட்டானின் பாராட்டை கேட்டவுடன் ஆந்தைக்கு மகிழ்ச்சி பொருக்க முடியவில்லை! ” நண்பா, இன்று முதல் உனக்கு நானாகவும், எனக்கு நீயாகவும் பாராட்டிக் கொண்டு வாழ்வதுடன், இந்தக் காட்டிலேயே- ஏன், வேறு எந்தக் காட்டிலும் நம் புகழை நிலை நாட்ட வேண்டும்.” என்று சொன்னது ஆந்தை!

ஆந்தையின் நட்பு கிடைத்ததும் அதற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை! தன்னை விட பெரிய ஆள் இந்த உலகத்திலேயே இல்லை என்று இறுமாப்போடு இருந்தது கோட்டான்!

அந்தச்சமயம் அங்கு வந்த குயில், பக்கத்தில் இருக்கும் ஒரு மரத்தில் அமர்ந்து, தனது இனிமையான குரலின் இனிமையை அடக்கமாகப் புலப்படுத்திக் கொண்டிருந்தது.

அக்கம் பக்கத்தில் இருந்த மற்ற குருவிகள், அந்த இனிமையான குரலைக் கேட்டுப் பல வகையான பாராட்டுக்களை எழுப்பிக் கொண்டிருந்தன!

இந்தக் காட்சியைக் கண்ட ஆந்தையும் கோட்டானும் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டிருந்தன!

“என்ன நண்பா, இந்தக் குயிலின் குரலை உன்னால் ரசிக்க முடிகிறதா?” கோட்டானைப் பார்த்து ஆந்தை இவ்வாறு கேட்டது!

“நம் குரலையே நாம் ரசிக்க நேரமில்லை, இவற்றுக் கெல்லாம் நமகேது நேரம்? அந்தக் குயிலைச் சுற்றிக் கொண்டிருக்கும் மற்றவற்றுக்கு “ரசனை” என்றால் ஏதாவது தெரியுமா? தெரிந்தால் இப்படிக் குயிலின் காட்டுக் கூச்சலைக் கேட்க ஓடுமா?” என்று கோட்டான் ஆரம்பித்தது!

“நமக்கு மற்றவர்களைப் பற்றி அக்கறை இல்லை! அதுகள் ஒருவழி என்றால், நாமும் அவ்வழியில்தான் செல்ல வேண்டுமா என்ன? நமக்கென ஒரு வழி இருக்கும் போது, நாம் ஏன் அவ்வழியை நாட வேண்டும்?” ஆந்தையின் பதில், கோட்டானுக்குக் குதூகலத்தை அளித்தது!

“ஆம் நண்பா, நம் திறமையை நாம் புரிந்திருக்கும் போது: பிறர் நம்மைப் பற்றிப் புரிந்தாலென்ன, புரியாவிட்டால் என்ன? நீ உன் குரலை எழுப்பு, நான் ரசிக்கிறேன்! நான் என் குரலை எழுப்புகிறேன் நீ ரசி!” என்று கோட்டான் கூறியது, இரண்டும் சேர்ந்து ஏக காலத்தில் அந்தக் காட்டில் குரலெழுப்ப ஆரம்பித்தன!

_________________________________**_______________**__________________________**_____________________________

காலம் ஓடிக் கொண்டிருந்தது!……

குயிலின் புகழுக்கு இணையாக வரவேண்டுமென்று நினைத்த ஆந்தையும் கோட்டானும், என்கேங்குப் பறந்து சென்று கத்த முடியுமோ அங்கெல்லாம் சென்று கத்திப் பார்த்தன! அலறிப் பார்த்தன!!
இவற்றின் அலறலையும் ஆரவாரத்தையும் கண்ட மற்ற புள்ளினங்கள், எங்கு செல்ல வேண்டுமோ அங்கு சென்று கொண்டிருந்தன! எதை ரசிக்க வேண்டுமோ அதை கேட்டு ரசித்துக் கொண்டிருந்தன!!

குயிலின் புகழ், ஆந்தையும் கோட்டானும் கத்துவதால் மறைந்து விடப் போவதில்லை! புகழைத் தேடி குயில் செல்ல வேண்டிய அவசியமும் இல்லை!

குயிலைப் பற்றி கோட்டான் குறை சொன்னதாம்!

சிங்கை, முகிலன்
“உருவகக் கதைகள்” என்ற புத்தகத்திலிருந்து.
வெளியீடு: சிங்கப்பூர் தமிழர் இயக்கம்.
35, NORRIS ROAD, SINGAPORE -8
டிசம்பர், 1976."To a brave heart, Nothing is impossible"
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!